Thursday, July 21, 2011

தனியாருக்கு சாதகமாக அரசு மருந்து நிறுவனங்கள் மூடல்.



நம் நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்த வெறி நாய்கடி மருந்து, இரனஜன்னி மருந்து, போலியோ, மற்றும் டி.பி மருந்து என மக்களின் உயிர் காக்கும் முக்கிய மருந்துகளை உதக மண்டலத்தில் உள்ள குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டியூட், மற்றும் சென்னை, கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டியூட் ஆகிய நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வந்தது.

அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்த இரு நிறுவனங்களிலும் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று காரணத்தை சொல்லி இழுத்து மூடிவிட்டார்.

இதன் விளைவாக, இப்போது சாமானிய மக்களுக்கு அதிகம் பயன்படும் மிக முக்கிய மருந்து வகையான இந்த வகை மருந்துகளை தயாரிக்க இந்தியாவில் பல புது மருந்து நிறுவனங்கள் தோன்றின.

இந்த நிறுவனங்கள், முதலில் சராசரி விலையில் மருந்துகளை விற்பனை செய்து வந்தது, மருந்துகளின் தேவை அதிகரிக்க தொடங்கியதும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விலையை அதிகரித்து வருகிறது.

முந்தைய காலங்களில், அரசு மருத்துவ மனைகளுக்கு இலவசமாக கிடைத்து வந்த இந்த மருந்துகளை இப்போது ஒவ்வொரு மாநில அரசும் தனியார் நிறுவனங்களிடம் காசு கொடுத்து வாங்கி வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் கொடுக்கவேண்டிய இந்தவகை மருந்துகளை இப்போது தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய அரசு கைகட்டி நின்று வருகிறது.

இப்போது தனியார் நிறுவனகள் சாதாரணமாக ஒரு பெட்டிக்கு முன்னூறு ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகளை தயாரித்து வழங்கிவந்த மத்திய அரசு நிறுவனங்களை மூடியது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசு உடனடியாக இந்த நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து மூடப்பட்ட கிங் இன்சிடியுட் மற்றும் குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்களை மத்திய அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

மிக முக்கியமான 356 வகை மருந்துகளை மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்த்து கட்டுப்பாடான விலையில் விற்பனை செய்யவேண்டும்.

இந்திய அளவில் இந்த 356 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலை பட்டியலை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை மாநில அரசும், மக்கள் பிரதிநிதிகளும் சமுக அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

No comments: