Thursday, May 5, 2011

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை ; மதுரை ஐகோர்ட்டு.

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரி கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி மேலூர் அம்பலக்காரன்பட்டியில் உள்ள வல்லடிக்காரர் கோவிலுக்கு வந்தார்.

அப்போது தாசில்தாராக இருந்த காளிமுத்துவுடன் வந்த தேர்தல் வீடியோகிராபர் கண்ணன் படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்ததும் படம் எடுக்கக்கூடாது என்று கூறி தி.மு.க.வினர் வீடியோகிராபரிடம் இருந்து கேமராவை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாக மு.க.அழகிரி மீது புகார் கொடுத்ததாகவும், ஏற்கனவே புகாரில் கூறி உள்ளது போன்று சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் காளிமுத்து தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார். அதன்பின்பு காளிமுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் காளிமுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாகமே மு.க.அழகிரி மீது புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம், தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என்னை சிலர் மிரட்டியதால் புகாரை வாபஸ் வாங்கினேன் என்று 22.4.2011 அன்று போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தங்கள் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதை அறிந்தேன். அப்போது என்னையும் அந்த வழக்கில் சேர்த்து விசாரிக்கும்படி மனு தாக்கல் செய்தேன். மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, புகாரில் உண்மை இல்லை என்றால் புகார் தவறு என்று கூறி போலீசாரே வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

ஆனால் கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கை திறந்த மனதுடன் விசாரிக்க விரும்பவில்லை. அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை உண்மையான கோணத்தில் செல்லாது. போலீஸ் சூப்பிரண்டு தனது செல்வாக்கை இந்த வழக்கில் பயன்படுத்த முயல்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகளுக்கு பயந்து செயல்படுவது போல் உள்ளது. மதுரையில் இருக்கும் போலீஸ் படை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த வழக்கை மதுரை மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை சேர்ந்த நடுநிலையோடு செயல்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி துரைச்சாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சீனிவாசனும், அரசு தரப்பில் வக்கீல் இளங்கோவும் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வருகிற 19-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments: