Thursday, May 5, 2011

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை!



தமிழக சட்டபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தனர்.

இந்த பிரசாரத்தின்போது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.

தி.மு.க. தேர்தல் குழு உறுப்பினர்கள் பொன். முத்துராமலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த புகார் மனுவை கொடுத்தனர்.

இதுபோல், “துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது அ.தி. மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மனோஜ்பாண்டியன் எம்.பி. தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

பேச்சு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, 3 பேரும் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார்கள். அதில், “அரசியல் தொடர்பாகவே பேசியதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்கவில்லை” என்றும் கூறி இருந்தனர். இந்த விளக்க கடிதங்கள் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய தேர்தல் கமிஷனர் குரேசி, தேர்தல் அதிகாரிகள் சம்பத், பிரம்மா ஆகியோர் 3 தலைவர்களும் அளித்துள்ள விளக்க கடிதங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்ட தனிப்பட்ட விமர்சன புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று முடிவு செய்தனர்.


No comments: