Tuesday, August 2, 2011

மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு : தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்.


மருத்துவ படிப்பு பொது நுழைவு தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு:  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, “தேசிய திறன் மற்றும் பொது நுழைவு தேர்வு” நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது எனது கவனத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வரை, நுழைவு தேர்வு, நடத்தியே மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை 2007-08 ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அது முதல் கவுன்சிலிங் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

வல்லுனர் குழுவை கொண்டு விரிவாக ஆய்வு நடத்திய பிறகு, நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

கிராமப்புற மாணவர்களும், குறைந்த சமூக பொருளாதார பின்னணியை உடைய மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு முறையில், நகர்ப்புற அறிவார்ந்த மாணவர்களுடன் போட்டிப் போட முடியாது. நகர்ப்புறம் மற்றும் பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கு வசதியான மாணவர்கள் இதற்கென செயல்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாது. இதனால் நுழைவுத் தேர்வுகளில் இவர்கள் வெற்றி பெற முடிவதில்லை.

தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் மூலமும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களும், வசதி படைத்தவர்களும் தான் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்ட பிறகு, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய தகுதியான கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பலன் அடைந்து வருகின்றனர்.

தற்போது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தும் மாணவர் சேர்க்கை கொள்கை மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள், அதிகமானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்கு தேவையான மனித சக்தியை உருவாக்க முடியும்.

சமூக நீதியை நிலை நாட்டும் வகையிலும், தமிழகத்தில் தொழில் படிப்புகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுநுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதுடன், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.

தவிர, தமிழகத்தில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்த டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முதுகலை மருத்துவ படிப்பை அரசு மருத்துவ கல்லூரிகளில் முடிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு இந்த மாநிலத்திலேயே சேவை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த முறை வெற்றியும் அடைந்துள்ளது.பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்தால், மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவது கடினமாகி விடும்.

அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை குறித்து ஒரு முடிவு எடுக்கும் முன்பு, இதுபற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை மந்திரி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொது நுழைவுத் தேர்வு முறையானது, கல்வி திட்டத்தை செயல்படுத்துவதால் மாநில அரசுக்கு உள்ள உரிமையில் தலையிடுவதாக அமையும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும் பொது நுழைவு தேர்வு முறையை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எனவே மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வரும் முறையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: