கர்நாடகாவில் சுரங்கத் தொழில் முறைகேடுகளில் சிக்கிய எடியூரப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகலுக்கான ராஜினாமா கடிதத்தை தயாரித்த போது எடியூரப்பா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அப்போது அவர் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக நடந்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
எடியூரப்பாவை ராஜினாமா கடிதம் கொடுக்க வைக்கும் பொறுப்பை வெங்கையா நாயுடுவிடம் மேலிட தலைவர்கள் ஒப்படைத்திருந்தனர். கடந்த ஞாயிறு மதியம் பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடும்படி கூறினார். மறு நிமிடம் எடியூரப்பாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அங்கு இருந்த ஒரு லேப்-டாப்பை தூக்கி தரையில் போட்டு உடைத்தார்.பிறகு தான் அது வெங்கையா நாயுடுக்கு சொந்தமான லேப்-டாப் என்று தெரிந்தது.
எடியூரப்பாவை அவர் அருகில் இருந்த சில மந்திரிகள் சமரசம் செய்தனர். சில நிமிடங்கள் கழித்து மூத்த அமைச்சர் ஒருவர், "சரி.... வாங்க கடிதம் கொடுத்து விட்டு வரலாம்" என்று கூறியபடி எடியூரப்பாவை சோபாவில் இருந்து எழுப்ப முயன்றார். இதனால் எடியூரப்பா மீண்டும் கோபப்பட்டார். தன்னை எழுப்ப சொன்ன அமைச்சர் கன்னத்தில் “பளார்” என அறைந்தார்.
இது அந்த அறையில் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சுமார் 30 நிமிடங்கள் கழித்தே எடியூரப்பா இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் பிறகு அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று ராஜினாமா கடிதத்தை கொடுக்க வைத்தனர்.
No comments:
Post a Comment