Tuesday, August 2, 2011

இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் : ஜெயலலிதா அறிவிப்பு.



சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெற உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அமெரிக்கத வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவர்களுடனான சந்திப்பின்போதும், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: