Monday, June 20, 2011

சுவிஸ் வங்கியில் ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம் குறைந்தது !



சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ 5 லட்சம் கோடி வரை குறைந்துவிட்டதாக சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், உண்மையான காரணம் இதுவல்ல என்றும், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments: