Thursday, June 23, 2011

டி.சி.எஸ். நிறுவனத்தில் 31,500 பேர் வெளியேறினர்.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில், சென்ற 2010 - 11 ஆம் நிதி ஆண்டில் நிகர அடிப்படையில் 38,185 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

அந்த நிதி ஆண்டில், இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக மொத்தம் 69,685 பொறியியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், 31,500 பேர் வேலையை விட்டு விலகியதால், நிகர வேலைவாய்ப்பு 38,185 ஆக உள்ளது.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது. சாஃப்ட்வேர் பொறியியல் வல்லுனர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, இத்துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தாவிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக டி.சி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில், டி.சி.எஸ். நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 62,092 பணியாளர்களை தேர்ந்தெடுத்தது. அவ்வாண்டில், 26,899 பேர் வேலையை விட்டுச் சென்றுள்ளதையடுத்து, உள்நாட்டில் நிகர வேலைவாய்ப்பு 35,193 ஆக உள்ளது. வெளிநாடுகளில் மொத்தம் 7,593 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. வெளிநாடுகளில் 4,601 பேர் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். ஐ.டி. துறையில், வெளிநாடுகளில்தான் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

No comments: