Friday, April 22, 2011

மன்மோகன்சிங் ஆவேசம் : மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா - ஊழலை ஒழித்தே தீர வேண்டும்.

மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா    ஊழலை ஒழித்தே தீர வேண்டும்:    மன்மோகன் சிங் ஆவேசம்

இந்திய “சிவில் சர்வீஸ் தினவிழா” இன்று டெல்லியில் நடந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரிக்கும் பணியில் மந்திரிகளும், அதில் இடம் பெற்றுள்ள குழு உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதை தயாரித்து கொடுத்ததும் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். ஊழல் விவகாரம் இப்போது நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நமது சட்டமும், நடைமுறைகளும் ஊழலை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதுமான பலம் கொண்டதாக இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். இதை வைத்து எதையும் செய்ய முடியாது என்ற உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் விஷயத்தில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களிடையே சகிப்பு தன்மை எதிர் மறையாக மாறும் நிலை உருவாகி உள்ளது.

ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கையும், உறுதியான நடவடிக்கையும் இப்போது தேவை என்று அவர்கள் கருதுகின்றனர். ஊழலை ஒழிப்பது என்பது கடும் சவாலாக இருக்கலாம். ஆனால் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை ஒழித்தே தீரவேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நீங்களும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்), முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நேர்மையுடனும், அச்சமில்லாமலும் நடந்து அரசியல் தலைமைகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உரிய ஆலோசனைகளை தர வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியை புதுப்பித்து கொண்டு ஊழலுக்கு எதிராக போராட முன் வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு பணிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வெளிப்படை தன்மைகள் இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்டம், நடைமுறைகளை இன்னும் வலுவாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற் கொண்டு உள்ளது. ஊழல் விவகாரங்களை வெளிகொண்டு வருபவர்களை பாதுகாக்க ஏற்கனவே பாராளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பணிகளில் இருப்பவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நீங்கள் நேர்மையான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்கிறீர்கள். உங்கள் பணி நன்றாக அமைந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

No comments: