Friday, April 22, 2011

ஈரோட்டில் இன்று அனுமதியின்றி இயங்கிய 32 சாயப்பட்டறைகள் இடிப்பு.

ஈரோட்டில் இன்று  அனுமதியின்றி இயங்கிய 32 சாயப்பட்டறைகள் இடிப்பு; பல லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் பறிமுதல்

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாயக்கழிவு பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றில் சுத்தீகரிக்காத சாயக்கழிவுகளை திறந்து விடுவதால் நீர், நிலம் மாசுபடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். சென்னை ஐகோர்ட்டிலும் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முறையான சுத்தீகரிப்பு மையங்கள் அமைக்காத ஏராளமான பிளீச்சிங், டையிங், பிரிண்டிங் பட்டறைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். மேலும் சாயப் பட்டறைகளை கண்காணிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, அசோகபுரம் ஆகிய பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்த அனுமதியும் இல்லாமல் ரகசியமாக 32 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அனுமதியில்லாமல் இயங்கிய அந்த சாயப்பட்டறைகளை இடித்து தள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று ஈரோடு உதவி கலெக்டர் சுகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மலையாண்டி, மின்வாரிய அதிகாரிகள் 3 ஜே.சி.பி. எந்திரங்கள், 2 கிரேன் ஆகியவற்றுடன் பி.பி.அக்ரஹாரம் பேரேஜ் செல்லும் வழியில் உள்ள சாயப்பட்டறைக்கு சென்ற னர். பின்னர் அப்பகுதியில் இயங்கிய 5 சாயப்பட்டறைகளை அதிரடியாக பொக்லைன் உதவியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

அதன்பின்னர் வீரப்பன்சத்திரம் நாராயணவலசு பகுதியில் அனுமதிஇல்லாமல் இயங்கிய சாயப்பட்டறைகளை இடித்து தள்ளப்பட்டது. இதேபோன்று 32 ஆலைகளும் இன்று இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இடிக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் மதிப்பிலான எந்திரங்களை கிரேன் உதவியுடன் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆலை அதிபர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். பொதுவாக சாயப் பட்டறைகள் கழிவுநீர் பிரச்சினையில் அதிகாரிகள் அதிக பட்சம் சீல் வைப்பது தான் வழக்கம். அதுவும் சில நாட்களில் உடைத்து வழக்கம்போல் வேலையை ஆரம்பித்து விடுவார்கள். சீல் வைத்து உடைத்து மீண்டும் சீல் வைக்கப்பட்ட சம்பவங்கள் ஈரோட்டில் நடந்துள்ளன. இன்று இடிக்கப்பட்ட ஒரு சாயப்பட்டறையில் முறையான சுத்தீகரிப்பு நிலையம் அமைக்காத காரணத்தால் மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆலை அதிபர் திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து ஆலையை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சமீபத்தில் திருப்பூரில் ஏராளமான சாயப்பட்டறைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டன. அந்த ஆலைகள் ஈரோடு பகுதியில் திடீரென முளைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தேர்தல் நேரம் என்பதால் அரசியில் தலையீடு எதுவும் செல்லாது என்ற காரணத்தால் அதிகாரிகள் துணிந்து இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெரியவந்தது. சாயப்பட்டறைகள் இடித்து தள்ளப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: