Friday, April 22, 2011

சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் பற்றி ஒரு பார்வை.

இன்று சர்வதேச புவி தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மனித இனத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து, பூமியை காப்பாற்றும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தும் நோக்கில் கடைபிடிக்கப்படும் இந்த தினத்தில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாட்டு அரசாங்கங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

புவி வெப்பமயமாதல், தற்போது உலகின் தலையாய பிரச்சினையாக மாறியுள்ளது. கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்டவை பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.

குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு புகையால்தான் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

அதிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில் கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதற்கு பல்வேறு நாட்டு அரசாங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்புக்கு மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகளை பல்வேறு நாட்டு அரசாங்கள் வழங்கி வருகின்றன.

இந்தியாவிலும் இதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்பை தீவிரப்படுத்தும் விதமாக சமீபத்தில் இரண்டு பிரத்யேக உயர்மட்ட குழுக்களை அமைத்தது. இதுதவிர, மத்திய பட்ஜெட்டில் பேட்டரி கார்களுக்கு மானியம், வரிச்சலுகைகளையும் அரசு அறிவித்தது.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதற்கான அவசியத்தை பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் உணர்ந்து கொண்டுள்ளன. இதனால், சிஎன்ஜி மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்பு பணிகளில் அந்த நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மேலும், சிஎன்ஜி மற்றும் பேட்டரி கார்களை அந்த நிறுவனங்கள் வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன. தவிர, புதிய மாடல்களை அறிமுகப்படுத்துதிலும் அந்த நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தனி மனிதனாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்பவர்கள், கார் வாங்கும்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார் மாடல்களை தேர்வு செய்யலாம்.

மார்க்கெட்டில் உள்ள சில கிரின் கார்கள் பற்றிய தொகுப்பு.

ஹூண்டாய் ஐ10 சிஎன்ஜி:

ஹூண்டாயின் வெற்றிகரமான ஐ10 காரின் சிஎன்ஜி மாடல் மாசுக்கட்டுப்பாடு விதிகளுக்கு பொருந்தும் விதத்தில் வருகிறது. சிஎன்ஜி சிலிண்டர் கிட் பொருத்தப்பட்ட ஐ10 கார் பெட்ரோல் மாடலை விட விலையில் ரூ.55,000 கூடுதலாக உள்ளது. சிஎன்ஜி மாடலில் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதோடு, போக்குவரத்து செலவீனமும் குறைவு. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஆகிய இரண்டிலும் இயங்கும் எஞ்சின் கொண்டுள்ளது ஐ10 சிஎன்ஜி.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ கிரின்:

உலகின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. ஆல்ட்டோ சிஎன்ஜி மாடலில் ஐ-ஜிபிஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் டெல்லியில் ரூ.2.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பட்ஜெட்வாசிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

டொயோட்டோ இன்னோவா சிஎன்ஜி

டொயோட்டோவின் தரமான படைப்புகளில் ஒன்றாக வலம் வரும் இன்னோவா கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் சிஎன்ஜி கிட் பொருத்தி தருகிறது டொயோட்டோ. இதற்கு கூடுதலாக ஒரு லட்சம் செலவாகும். மும்பை , டெல்லியில் மட்டும் இன்னோவா சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது.

செவர்லே பீட்:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பீட் காரின் சிஎன்ஜி மாடல் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. 1.2 லிட்டர் ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த காரில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டரும், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சிலிண்டரை முழுவதுமாக நிரப்பினால், 349 கி.மீ., தூரத்திற்கு செல்லலாம் என ஜெனரல் மோட்டார்ஸ் மார் தட்டுகிறது. மேலும், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டையும் சேர்த்து 1,000 கி.மீ., வரை செல்ல முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. டெல்லியில் ரூ.4.11 லட்சம் விலையில் பீ்ட் சிஎன்ஜி மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா இன்டிகா இவி2 எல்பிஜி

கார் சந்தையில் நீண்ட காலமாக வியாபித்து வரும், இன்டிகா ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலான இவி2 மாடலை சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்த கார் எல்பிஜி மாடலிலும் விற்பனை செய்யபடுகிறது. 61.8 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது இன்டிகா இவி2. பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுடன் வந்துள்ள இந்த கார் டெல்லியில் ரூ.3.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக இடவசதி, மைலேஜ் இதன் தனிச்சிறப்புகள்.

மஹிந்திரா ரேவா ஐ:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்ற ரேவாவின் மேம்படுத்த்ப்பட்ட மாடலே ரேவா ஐ. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ., செல்லலாம் என மஹிந்திரா ரேவா நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கார் டெல்லியில் ரூ.2.85 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1 comment:

சுதர்ஷன் said...

தேவையான பதிவு .. சரியாக விழிப்புணர்வு ஏட்படுத்தப்பட்டிருககிறதா ? எத்தனை பேர் இவற்றை தெரிவு செய்கிறார்கள் ?

"கோ" -திரைவிமர்சனம்