Friday, April 22, 2011

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை : உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்.


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) அதிகார வரம்பு இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று எம்.சி.ஐ. கடந்த 21.12.10-ல் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து டி.டி. மருத்துவக் கல்லூரி மற்றும் டி.டி. மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

அந்த மனு தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் வி.கே. சுப்புராஜ் தனது பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணையை எதிர்த்து தமிழக அரசு இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் அந்த அறிவிப் பாணைக்கு இடைக்கால தடை விதித்து இந்த நீதிமன்றம் கடந்த 6.1.11-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நிபந்தனைகளை விதிக்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகார வரம்பு இல்லை. தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை உயர் நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. அதனால், மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பாணையைவிட அரசின் நுழைவுத் தேர்வு ரத்து சட்டமே செல்லும் என்று கூறியுள்ளார்.


No comments: