Friday, April 22, 2011

12-வது ஐந்தாண்டுத் திட்டம்: தனியார் - அரசு கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம - மன்மோகன் சிங்.



நாட்டில், 12-வது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கும்போது தனியார்-அரசுத்துறை கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிடல் அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

12-ம் ஐந்தாண்டுத்திட்டத்தை வகுக்கும் திட்டக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது பேச்சு விவரம் : 12-வது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் நமது நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் கடைசி ஆண்டில் நாம் கடந்த ஆண்டுதான் நுழைந்தோம். 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள அணுகுமுறை பற்றி விவாதித்து முடிவு செய்ய இது நல்ல தருணம்.

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்பது பற்றி ஒரு பட்டியலை முதலில் தயாரித்துக்கொண்டு அதிலிருந்து திட்டமிடல் பணிகளை திட்டக்குழு தொடங்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு ஓர் அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 11-வது ஐந்தாண்டுத் திட்டமானது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் சுமார் 8.2 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளநிலையில் முடிவடைகிறது. இது 9 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதைவிட குறைவான அளவே எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலமானது நாட்டில் கடும்வறட்சியும், உலக பொருளாதாரம் நசிவைச் சந்தித்த காலகட்டத்தினை கடந்து வந்தது என்பதால் இந்த அளவு வளர்ச்சியை எட்டியதை பாராட்டத்தான் வேண்டும்.

பல துறைகளில் முன்னேற்றம் என்பது எட்ட முடியாத சூழ்நிலை நிலவியபோதிலும் சில துறைகளில் நமது நாடு சாதனைகள் படைத்ததை மறக்கக்கூடாது. அதாவது, கல்விநிலையங்களில் புதிதாக படிக்கச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடையிலேயே படிப்பைக் கைவிடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆண், பெண் பிறப்பு விகிதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. சிசு மரண விகிதம் முன்பைவிட குறைந்துள்ளது. இதுபோன்றவற்றில் நாம் நிர்ணயித்த இலக்கைவிட சாதித்தது குறைவுதான் என்றபோதிலும் பெரிய குறையாக கருதும்நிலை இல்லை. எனவே, எதிர்காலத்தில் இவ்வகையில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பு நமக்கு இருக்க வேண்டும். அதை செய்துகாட்டுவோம் என நாம் உறுதியேற்க வேண்டியது அவசியம்.

நமது நாட்டின் சமூக, பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க நாம் பழைய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே திட்டமிட வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, இது வரை 2004-05-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே பல பிரச்னைகள் தொடர்பாக விவாதங்கள் நடத்தி வந்துள்ளோம். அதாவது 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலம் தொடங்கும் முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்தே ஆலோசனைகளை நடத்தியிருக் கிறோம். ஆனால், 2009-10-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் இப்போது வந்துவிட்டன. அதை உடனடியாக அனைத்துத் துறைகளுக்கும் தெரிவித்து விடுங்கள். இதன் மூலம் 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வறுமை ஒழிப்புத்திட்டத்தில் எவ்வளவு சாதனை படைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய புள்ளிவிவரங்களைவைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை திட்டக்குழு தயாரிக்க வேண்டும். அதை நாட்டு மக்கள் விவாதிக்க கூடிய வகையில் விரைவில் வெளியிட வேண்டும்.

நாம் இதுவரை சாதித்தவற்றினை நிலைநிறுத்துவதாகவும், அனைத்து தரப்பு நன்மைகளையும் கருத்தில்கொள்வதாகவும், விரைவான முறையில் பலன்தரத்தக்கதாகவும், நிரந்தர வளர்ச்சியை உறுதிசெய்வதாகவும் 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்திற்கான திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்காக புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது அரசு அமலாக்கிவரும் திட்டங்களில் எந்தெந்தத் துறைகளில் உரிய இலக்குகள் எட்டத்தவறியிருக்கிறோம் என்று பார்த்து அவற்றில் உரிய முன்னேற்றம் காண ஆவன செய்யவேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட திட்டங்களை மறுசீரமைப்பு செய்யலாம் அல்லது திட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்தலாம். எந்தெந்த புதிய சவால்களை நாம் இனி சமாளிக்க வேண்டும். அதற்கு என்னென்ன முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து திட்டமிடுவது அவசியம்.

திட்டங்களை அமலாக்குவதற்கு தேவையான நிதியாதாரங்களை திரட்டுவதுதான் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, கிடைக்கும் நிதியாதாரத்தை திறமையான முறையில் பயன்படுத்த நன்கு திட்டமிடவேண்டியது அவசியம். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தனியார்-அரசு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளும்வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தி, நகரமயமாக்கல், தண்ணீர் பிரச்னை ஆகியன எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னைகளாக இருக்கக்கூடும். எனவே, இந்தப் பிரச்னைகளை சமாளிக்க உரிய கொள்கைத் திட்டங்களை வகுக்க திட்டக்குழு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிதியமைச்சரின் யோசனைகளை பரிசீலிக்க வேண்டும்

12-வது ஐந்தாண்டுத்திட்ட இலக்கு 9 முதல் 9.5 சத வளர்ச்சி விகிதத்தை எட்டுவதாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் திட்டமிடலின்போது திட்டக்குழு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக நிதியமைச்சர் கூறிய யோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை கட்டுமானத்துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல யோசனைகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

சில முக்கிய பிரச்னைகள் குறித்து மாநில அரசுகளுடன் திட்டக்குழு ஆலோசனை நடத்தி முதலில் புதிதாக அணுகுமுறை ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அதை மத்திய அமைச்சகங்களுக்கு சுற்றுக்கு விட வேண்டும். அதன் பின் அணுகுமுறை பரிந்துரை அறிக்கை தயாரித்து அதை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்குத் தர வேண்டும். அதன் பின்னர் அந்த அறிக்கை தேசிய மேம்பாட்டு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இந்த கவுன்சிலின் கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறக்கூடும் என பிரதமர் இறுதியாக ஆற்றிய தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

No comments: