Monday, May 30, 2011

கலைஞர் 12வது முறையாக எம்.எல்.ஏ. பதவி ஏற்பு.


தி.மு.க., தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் இன்று (30.05.2011) காலை 11 மணிக்கு, புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 23ந் தேதி நடைபெற்றது.

அப்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்பட 229 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அன்றைய தினம் தி.மு.க. தலைவர் கலைஞர், டெல்லி சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சென்றிருந்தார். அதனால் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை. சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்ததால், அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சி சென்றுவிட்டனர். அதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை. அதன்பிறகு, கடந்த 27 ந் தேதி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில், சிவபதி, மனோகரன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு, 12வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கலைஞரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணியளவில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கூர்ந்து கவனியுங்கள் : கலைஞர்

பதவியேற்ற பின்னர் திமுக தலைவர் கலைஞரிடம், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கலைஞர், கூர்ந்து கவனியுங்கள் என்றார்.

1 comment:

Yoga.s.FR said...

மக்கள் ஏலவே கூர்ந்து "கவனித்ததால்"தான் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார்கள்.இன்னும் கூர்ந்து கவனிக்கச் சொன்னால் கட்சி "கட்டம்"கட்டித் தான் "பெட்டிச்"செய்தியாக வரும்!