Monday, May 30, 2011

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை. கலைஞர் டி.வி. யில் நான் வெறும் பங்குதாரர் தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2மணிக்குத் தொடங்கியது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக, பாட்டியாலா வளாகத்துக்கு குஷ்பு உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில கட்சிப் பிரமுகர்களும் கனிமொழியைக் காண நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்


கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார்.

அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார். டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது. இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

No comments: