Tuesday, May 31, 2011

லோக்பால் - பிரதமர், நீதிபதிகள், எம்பிக்களை விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு.


ஊழல் செய்யும் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்த லோக்பால் சட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகளான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்ட ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கபில்சிபல், வீரப்பமொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதை மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் எதிர்த்தனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே கடைசி வரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அண்ணா ஹசாரே, பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்கெனவே வடிவமைத்த லோக்பால் மசோதாவைவிட இந்த மசோதாவை மோசமானதாக மாற்ற முயற்சிக்கிறது என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக்பால் பிரதமரைக் கட்டுபடுத்தக் கூடாது-பாபா ராம்தேவ்:

பிரதமரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் விசாரணை எல்லைக்குள் கொண்டுவரக் கூடாது என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹார் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்தேவ், லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் கொண்டு வருவது சரியாக இருக்காது.

இந்த விவகாரம் தொடர்பாக நான் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை, பகிரங்கமாக விவாதம் செய்ய விரும்பவில்லை என்றார்.

No comments: