Tuesday, May 31, 2011

ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு : தானே வாதாட ராசா திட்டம் !


ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரமதர் மன்மோகன் சிங்குக்கும், அவர் தனக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக ராசா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான மனுவை விரைவில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனு மீது விவாதம் நடக்கும் போது தனது சார்பில் தானே ஆஜராகி வாதாட ராசா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாதத்தின்போது தாக்கல் செய்யவும், குறிப்பிட்டுப் பேசவும் சில முக்கிய ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். குறிப்பாக 18 முக்கிய கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று கூறப்படுகிறது.


இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே பரிமாறி கொள்ளப்பட்ட கடிதங்களாகும். மேலும் இந்தக் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் ராசாவால் சமர்பிக்கப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சரவை யின் ஒப்புதலின் பேரில் தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் அவர் முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்யும் போது நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளார்.

இவை தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு தான் எழுதிய கடிதங்களையும் ராசா ஆதாரமாகக் காட்டக் கூடும் என்று தெரிகிறது.


ராசா இந்த வாதங்களை எடுத்து வைக்கும்போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.


கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா 4 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கு நடக்கும்போதெல்லாம் அவர் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடு்த்தவாரம் 3வது குற்றப்பத்திரிக்கை-மேலும் சிலருக்கு சிக்கல்:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்த வாரம் சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதில் யார், யாருடைய பெயர்கள் இடம் பெறுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் சென்னை, டெல்லி, பெரம்பலூரில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ அதன் தொடர்ச்சியாக ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் ஷாகித் பல்வா ஆகியோரை கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொகுப்புகளை கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி சிபிஐ தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி சிபிஐ தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார், மும்பை சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் சோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெளதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 14 பேர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சி.பி.ஐயும், அந்தப் பணம் வெளிநாடுகளில் எப்படி முதலீடு செய்யப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சிகளில் அமலாக்கப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் மொரீசியஸ் தீவில் உள்ள சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் குழு மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கொடுத்து உதவ வேண்டும் என்று மொரீசியஸ் உச்ச நீதிமன்றம் அந்நாட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது சிபிஐக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இந் நிலையில் மொரீசியசில் உள்ள 15 நிறுவனங்களின் பணப் பரிமாற்றத்தை தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் பலவும் ஒரே தெருவில் உள்ள ஒரே அலுவலகத்தின் முகவரியை தங்களது முகவரியாதத் தந்துள்ளன.

எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணத்தை மொரீசியசில் முதலீடு செய்யவும், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதை முறையாக கொண்டு செல்லவும் இவை போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது.

இந்த பணப் பரிமாற்ற விஷயங்கள், சிபிஐயின் 3வது குற்றப்பத்திரிக்கையில் முழுமையாக இடம் பெறும் என்று தெரிகிறது. இதில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறலாம். இதைத் தொடர்ந்து அவர்கள் கைதாகலாம்.

நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணை:

இந் நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அமைச்சராக இருந்த ராசாவுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்ட நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

No comments: