Tuesday, May 31, 2011

ஐ.டி. தலைநகர் தகுதியை பறி கொடுக்கும் பெங்களூர்.


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற பெருமையை விரைவில் பெங்களூர் இழக்கவுள்ளது. நோய்டா மற்றும் குர்காவ்ன்க்கு அந்தப் பெருமை விரைவில் இடம் மாறும் என்று அசோசம் நடத்தியுள்ள சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் சொர்க்கபுரியாக ஒரு காலத்தில் விளங்கி வந்த நகரம் பெங்களூர். தோட்ட நகரம், பூ்ங்கா நகரம் என்ற பெருமைகளைக் கொண்டிருந்த பெங்களூர், பின்னர் தகவல் தொழில்நுட்ப தலைநகராக புது அவதாரம் எடுத்தது. ஓய்வுக்காக பெங்களூரில் யாரும் தங்க முடியாது என்ற அளவுக்கு நிலைமையும் மாறிப் போனது. அந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் படையெடுப்பால் பெங்களூரின் இயல்பும், கடும் விலைவாசியும், விண்ணைத் தொடும் வீட்டு வாடகைகளும், ரியல் எஸ்டேட் விலையும், மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் என நகரமே மாறிப் போய் விட்டது.

இந் நிலையில் விரைவில் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற அந்தஸ்தையும் இழக்கப் போகிறது பெங்களூர் என்கிறார்கள்.

இதற்குக் காரணம் நோய்டா மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவ்ன் ஆகிய நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால். பல்வேறு ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து இந்த நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளதால் விரைவில் பெங்களூரை இந்த இரு டெல்லி 'புற நகர்களும்' முறியடிக்கும் என்கிறார்கள்.

ஐடி தவிர ஐடிஇஎஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவு, பிபிஓ, கேபிஓ என பல்வேறு நிறுவனங்களும் நோய்டாவை நோக்கி பறக்க ஆரம்பித்துள்ளன என்று இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

பெங்களூர் நகரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பல்வேறு ஐடி நிறுவனங்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதே பெங்களூரை விட்டு பல நிறுவனங்கள் கிளம்பும் முடிவுக்கு வர முக்கியக் காரணமாம். மேலும் தலைநகருக்கு மிக அருகாமையில் நோய்டா இருப்பதும், தேவைப்படும் வசதிகள், சூழல் இருப்பதாலும் நோய்டாவுக்கும், குர்காவ்க்கும் ஐடி நிறுவனங்கள் இடம் பெயர விரும்புகின்றனவாம்.

இதுகுறித்து அசோசம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில்,பெங்களூரில் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்து விட்டது. அடிப்படை வசதிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், இட நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இங்கு உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மின்பற்றாக்குறை, குடிநீர்ப் பற்றாக்குறை, சாலை வசதிகள் போதுமானதாக இல்லாதது உள்ளிட்ட பலகுறைபாடுகள் நிரம்பி வழிகின்றன.

இவற்றின் காரணமாகவே நோய்டா மற்றும் குர்காவ்னை நோக்கி பலரும் கிளம்ப முக்கியக் காரணம். அதேசமயம், நோய்டா மற்றும் குர்காவ்னில் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றார் ராவத்.

நாடு முழுவதும் 800 ஐடி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத நிறுவனங்கள் கர்கானுக்கு இடம் பெயரவும், 25 சதவீத நிறுவனங்கள் நோய்டாவுக்குச் செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனவாம். 20 சதவீத நிறுவனங்கள் சண்டிகருக்கும், 15 சதவீத நிறுவனங்கள் புனேவுக்கும், 10 சதவீத நிறுவனங்கள் ஹைதராபாத்துக்கும் செல்ல விரும்பியுள்ளன.

பெங்களூர் சற்று சுதாரித்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் அது பென்ஷனர்களின் பாரடைஸாக மாறும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இதில் நம்ம மெட்ராசுக்கு வருவதாகவும் பெரிய அளவில் யாரும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மிக முக்கிய காரணம் மின் தடையாக இருக்கலாம். 'கரண்ட் இருந்தா தானே கம்பெனி நடக்கும்'!

1 comment:

ஷர்புதீன் said...

ஐ.டி., போனால் போகட்டும்., பெண்கள்??

ஹி ஹி