Tuesday, May 31, 2011

புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்.


புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments: