தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.
ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.
தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.
இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.
ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.
தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment