Wednesday, August 3, 2011

கனிமொழியின் மாநிலங்களவை முதல் உரை.



மாண்புமிகு துணைத் தலைவர் : திருமதி கனிமொழி அவர்களே, வருக. இதுதான் அவரது கன்னிப் பேச்சு. தயவுசெய்து அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

திருமதி கனிமொழி - தமிழ்நாடு : நன்றி, மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே! பணிவுடனும் நம்பிக்கையுடனும் நான் இன்று உங்கள்முன் இங்கு நிற்கிறேன். இம் மாபெரும் அவையில் நிற்கும் காரணத்தால் பணிவுடனும் உங்கள் அனைவராலும் உங்களுக்கு முன் இருந்தவர்களாலும் போற்றிக் காக்கப்படும் நம் நாட்டின் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனும் நிற்கிறேன்.

மதிப்புமிக்க இப்பேரவையில் நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே மக்களுக்குத் தேவையான அணுசக்தித் தொழில்நுட்பம் நம் நாட்டிற்குக் கிடைக்கவும் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்டுள்ள நியாயமற்ற தடைகள் நீங்கி நமது நாட்டிற்கெனச் சுதந்திரமான ராணுவச் சார்புடைய ஒரு அணுசக்தித் திட்டத்தைக் கடைபிடிக்கவும் மேற்சொன்ன ஒப்பந்தம் வழிவகுக்கும் என நானும் என் கட்சியும் உறுதியாக நம்புகின்றோம்.

இந்த ஒப்பந்தமானது இந்தியாவிற்கு அநீதி இழைக்கக்கூடியது எனச் சிலர் கூறுகின்றனர். அமெரிக்க இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதைப் பற்றிக் கூறும்போது, "இவ்வாறான ஒப்பந்தத்தை அமெரிக்கா உலகிலுள்ள வேறு எந்த ஒரு நாட்டுடனும் செய்துகொள்ளாது; இந்தியா மட்டுந்தான் இதற்கு விதிவிலக்கு" என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அதிக 'இடம்' கொடுப்பதாக அந்நாட்டுப் பத்திரிகைகளான தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியன அமெரிக்க அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இது போன்றதொரு ஒப்பந்தத்தைத் தன்னுடனும் செய்துகொள்ளுமாறு பாகிஸ்தான் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவை ஒரு மறைமுக அணுசக்தியாகவே ஆக்கிவிட அமெரிக்கா முயன்றுவருவதாகச் சீனப் பத்திரிகைகளும் சில அமெரிக்க அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்த பிறகு, அரசும் பிரதமரும் நாட்டுக்கு மிகவும் நன்மையைத்தான் செய்திருக்கின்றனர் என்னும் முடிவுக்கு வருவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும் பிற அம்சங்களையும் வைத்துப் பார்க்கும்போது, இது குறித்த உண்மையான மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளும் ஐயப்பாடுகளும் மக்களுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

நாடு முன்னேற்றம் அடைவதற்கான ஒரு வழியாகவே இதைக் கருதும் எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், ஒப்பந்தத்தினால் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக்களையும் முயற்சிகள் அரசையோ அரசின் நடவடிக்கைகளையோ நிலைகுலையச் செய்துவிடமாட்டா என்று நம்புகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நியாயமாக விவாதித்து உண்மைநிலையைப் புரிந்துகொண்டால் அனைத்து ஐயப்பாடுகளும் விலகி ஒருமித்த கருத்து ஏற்படும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஐயா! இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ அல்லது கட்சித் தலைவரோ தங்கள் நிலைபாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பவர்கள்தாம். ஒருமித்த கருத்து வேண்டும் என்றும் அதை ஏற்படுத்துவது மிக முக்கியம் என்றும் நாங்கள் விரும்பினோம். சீன நாட்டைப் போலவே இந்தியாவும் மின்சக்தி உற்பத்திக்கு நிலக்கரியையே பெரிதும் நம்பி இருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள் தனது அணுசக்தி ஆலைகள் மூலம் 40,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்யச் சீனா தயாராகிவருகிறது.

2020ஆம் ஆண்டுக்குள் 30,000 மெகாவாட் அணுசக்தியை உற்பத்திசெய்யும் எண்ணம் நம் நாட்டுக்கும் இருக்கிறது. ஆனால், 123 ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் அது சாத்தியமாகாது. எனவே, உள்நாட்டில் கிடைக்கும் அதிவேக அணு உலைத் தொழில்நுட்பம் நடை முறைக்கு வரும்வரை, இன்னும் சில தலைமுறைகளுக்கு வெளிநாட்டில் இருந்து யுரேனியம் போன்ற அணுசக்தி எரிபொருள்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். தோரியம் சார்ந்த அணுசக்தித் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நாம் முதலீடு செய்தாக வேண்டும். ஆனால், அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது.

அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய மிகவும் தேவைப்படுவது பயன்படுத்தப்பட்ட எரி பொருளிலிருந்து மீட்கப்படும் புளூட்டோ னியம். இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் தோரியத்துடன் புளூட்டோ னியத்தைச் சேர்த்து மீண்டும் பயன்படுத்தினால் சாதாரண அணுசக்தி உலைகளிலிருந்து பெறப்படும் அணு ஆற்றலைவிட 30 மடங்கு அதிக அளவு ஆற்றல் கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால், அந்த நிலையை அடைவதற்கு நாம் முதல் அடி எடுத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

பாதுகாப்பு மற்றும் அரசியல் விஷயங்களைத் தவிர, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பல விஷயங்களும் இதில் அடங்கும். தொழில் துறை வளர்ச்சிகள் அனைத்தும் மின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கின்றன; உலகின் ஆற்றல் தேவையின் 85 சதவீதமானது சடலங்கள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றிலிருந்துதான் பெறப்படுகிறது. சடலங்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் அளவு கார்பன்-டை- ஆக்ஸைடை, அதாவது நொடி ஒன்றுக்கு 730 டன் வீதம், வாயு மண்டலத்தில் நாம் கலக்கிறோம்.

ஐயா! சூரிய செல்களிலும் எளிய காற்றாலைகளின் மாசற்ற அழகிலும் நம்பிக்கை வைத்திருக்கும் சுற்றுப்புறச் சூழல் நிபுணர்கள் சிலர், நம் நாட்டின் மொத்த ஆற்றல் தேவையை இவற்றால் நிறைவேற்ற முடியாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இது போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை நாம் கைவிட்டுவிட வேண்டும் என நான் கூறவில்லை; அவை பயனுள்ளவை என்றும் அவற்றால் முக்கியமான பணிகள் நடை பெறுகின்றன என்றும் நான் அறிவேன். ஆனால், பெருகிவரும் நம் நாட்டின் ஆற்றல் தேவைகளுக்கு இவற்றால் மிகச் சொற்பமான அளவிலேயே ஆதாயம் கிட்டும்.

உதாரணமாக, நார்மண்டியில் பிரான்ஸ் அமைத்து வருவதைப் போன்ற ஈ.பி.ஆர். ரக அணு உலை ஒன்றை அதிநவீன ரகக் காற்றாலையால் பதிலீடுசெய்ய வேண்டுமென்றால் இத்தாலியிலிருந்து ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரம்வரையுள்ள சுமார் 700 கிலோமீட்டர் தூரத்திற்கு அவற்றை வரிசையாக வைக்க வேண்டும். அப்படி வைத்தால்கூட, காற்று பலமாக வீசும்போதுதான் அவை மின்சாரத்தை உற்பத்திசெய்யும்.

கரும்பிலிருந்து எத்தனால் எடுப்பதைப் போலத் தற்பொழுது இயற்கை எரிபொருள்களைப் பற்றிப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள உழுவதற்கு ஏற்ற நிலங்களனைத்தையும் ஒன்று சேர்த்தாலும், தற்போதைய எண்ணெய்த் தேவைக்கு அவை மாற்றாக ஆகவே முடியாது; மேலும், அதனால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படலாம். 2100ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் வற்றிவிடும் நிலைமை ஏற்படும். அப்போது நம்மிடம் நிலக்கரியும் அணு ஆற்றலும் மட்டுமே எஞ்சியிருக்கும். 'குளோபல் வார்மிங்'கை (பூமி வெப்பமடைதல்) அதிகரிக்கச் செய்யும் அம்சங்களில் பெரும் பங்கு வகிக்கும் நிலக்கரியை அதிக அளவில் உபயோகப்படுத்துவது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு டன் நிலக்கரி அல்லது எண்ணெய் தரக்கூடிய ஆற்றலை ஒரு கிராம் யுரேனியம் தந்துவிடும். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட எரிபொருளை மீண்டும் பதப்படுத்தி, 3 சதவீதம் ரேடியோ-ஆக்டிவ் தனிமங்களைப் பிரித்தெடுத்து நிரந்தரமாகப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளலாம்; மீதமுள்ள 97 சதவீத எரிபொருளை மீட்டுத் திரும்பவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அணு ஆற்றலுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு வாதம் என்னவெனில், 'செர்னோபில்' மற்றும் 'த்ரீ மைல் ஐலண்ட்' ஆகிய பேரழிவு நிகழ்ச்சிகள். இதில் 'த்ரீ மைல் ஐலண்ட்' பேரழிவு நாம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பயங்கரம் ஆகும். அணு உலையின் மையப்பகுதி முழுவதும் உருகி அதில் பெரும்பாலான பகுதி அவ்வுலையின் அடிப்பகுதியில் விழுந்துவிட்டது. அந்நிலையிலும், அதிலிருந்து வெளியான ஆபத்தான அணுக்கதிர்கள் பாதுகாப்பு மிக்க அந்த உலையின் சுவர்களைத் தாண்டி வெளியேறவில்லை. எனவே, யாருக்கும் தீவிரமான காயங்கூட உண்டாகவில்லை. உண்மையில், த்ரீ மைல் ஐலண்ட் பாதுகாப்பான அணு உலைக்கான வெற்றிகரமான உதாரணமாகும். செர்னோபில்லில் நடந்தது முற்றிலும் வேறாகும். அங்குப் பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை; அவ்வுலையின் கட்டுமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதை நிலையற்றதாக ஆக்கிவிட்டது. 600 டன் எடையுள்ள கருங்கல்லினால் ஆன 'மாடரேட்டர்' ஒன்று தீப்பிடித்து வாரக்கணக்கில் எரிந்தது. சம்பவம் நடந்த சில மாதங்களுக்குள்ளேயே 32 பேர் இறந்துவிட்டனர்; 200 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் சிலர் புற்றுநோயாலும் அவதிப்பட்டனர். ஓர் அணுசக்தி உலை, எப்படிச் செயல்படுத்தப்படக் கூடாது என்பதற்குச் செர்னோபில் ஒரு சிறந்த உதாரணமாகும். உலகமெங்கும் வருடமொன்றுக்கு 15,000 பேர்களைப் பலிவாங்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துகளோடு ஒப்பிட்டால் கடந்த 50 ஆண்டுகளில் சிவில் அணு சக்தித் தொழிற்சாலை விபத்துகள் மிகவும் குறைவு. சில சமயங்களில் நமது சார்புகள் நம் கொள்கைகளைச் சார்ந்து உள்ளனவே தவிர, உண்மை நிலவரத்தை அல்ல.

உலகளாவிய அணுசக்தித் தொழில் துறையின் அமைப்பை வைத்துப் பார்த்தால், நமது அணு ஆற்றல் திட்டங்களை நிறைவேற்றக் கூடிய அணுசக்தித் தொழில்நுட்பமும் ஆதாரங்களும் நமக்கு எளிதாகக் கிடைக்க இந்த ஒப்பந்தந்தான் ஒரே வழி. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால், அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவில் நாம் இடம்பெறவில்லை. அதனால், இக்குழுவைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகளுடன் அணுசக்தித் தொழிலில் ஈடுபடுவது என்பது நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே அமலில் உள்ள தடைகளின் காரணமாக நேனோ தொழில்நுட்பம், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் போன்றவை நமக்கு மறுக்கப்படுகின்றன.

1998ஆம் ஆண்டு நாம் நடத்திய அணுகுண்டுச் சோதனையைக் கண்டனம் செய்யாத ஒரே நாடு பிரான்ஸ். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அணு சக்தி சம்பந்தமான இந்திய-பிரான்ஸ் கூட்டுக் கூட்டத்தில், நாம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மேற்சொன்ன குழுவிடம் ஒப்புதல் பெறாதவரை அணுசக்தித் தொழில்நுட்பத்தை நமக்குத் தர முடியாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. தமிழகத்தின் கூடங்குளம் அணுசக்தி ஆலைக்குத் தேவையான நான்கு அணு உலைகளைத் தர வேண்டிய நமது நீண்ட நாள் நட்பு நாடாகிய ரஷ்யாவும் ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாமென்று முடிவுசெய்துவிட்டது. 1985ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமரான மறைந்த திரு. ராஜீவ்காந்திக்கும் சோவியத் யூனியனின் அதிபர் மிகாயில் கொர்பசேவுக்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி கூடங்குளம் அணுமின் ஆலை அமைய ரஷ்யா உதவி அளித்துவந்தது. ஆனால், சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர், ரஷ்யா அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவில் சேர்ந்துவிட்டதால் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்குச் சிவில் அணுசக்தித் தொழில் நுட்பத்தை அதனால் அளிக்க முடியவில்லை. இன்று அறிக்கை வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சரும் பிரதமரும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, நம் நாடு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதால், மற்ற ஏற்பாடுகளில் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் திட்டத்தை அமல்படுத்துவதில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தொய்வின் விளைவாக, தமிழ்நாட்டில் மத்திய அரசு செய்யவிருக்கும் 26,000 கோடி ரூபாய்த் திட்ட முதலீட்டிலும் காலதாமதம் ஏற்படும். 2006ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசு 11,083 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புள்ள பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,25,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் கிட்டும். ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் நமக்கு இயல்பாகக் கிடைத்திருக்கக் கூடிய, 1,800 மெகாவாட் மின்சக்தியும் அதன் விளைவாக உருவாகியிருக்கக்கூடிய பல தொழிற்சாலைகளும் விவசாயத்திற்குத் தேவைப்படும் மின் சக்தியும் வேலைவாய்ப்புகளும் தள்ளிப்போகின்றன. இவ்விடத்தில் நான் மாண்புமிகு பிரதமர் அவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியன்று நிகழ்த்திய உரையினை நினைவுபடுத்த விரும்புகிறேன்: "அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தங்கள் உலகெங்குமுள்ள அனைத்துத் தலைநகரங்களிலும் வர்த்தக வாய்ப்புகளை உரு வாக்கும். உலகநாடுகள் மத்தியில் நமக்கு உரிய இடத்தை மீண்டும் பெறும் நமது பயணத்தில் இது மேலும் ஒரு அடியாகும்."

மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே! இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அணு ஆற்றல் குறித்த அம்சங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், இந்த 123 ஒப்பந்தமானது நமக்குச் சாதகமான வகையில் நம் நாட்டை அமெரிக்காவுக்கு அருகில் இட்டுச் செல்லும் என்பதை நான் மிகைப்படுத்திக் கூற முன்வரவில்லை. காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியம் ஆகிய பழைய அச்சுறுத்தல்களை நாம் நம் மனத்தைவிட்டு விரட்டியடிக்க வேண்டும். நமது செயல்களிலோ அல்லது கொள்கைகளிலோ சுதந்திரத்தை இழக்காமல் நம்மால் எந்த நாட்டுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற முடியும் என்னும் தன்னிறைவையும் நம்பிக்கையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது அமெரிக்காவின் அனைத்துச் செயல்களுக்கும் நாம் ஆதரவு அளிப்பதாக ஆகிவிடாது.

அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவிலுள்ள எந்த நாட்டுடனும் நாம் செய்துகொள்ளும் எந்த ஒப்பந்தமும் செறிவுப் பொருள் சார்ந்த உடன்படிக்கையுடன் (எப்.எம்.ஸி.டி) சேர்ந்தே வரும் என்னும் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 123 ஒப்பந்தமானது சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களைத் தனித்தனியே வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை நமக்கு அளிக்குமாதலால், இந்த ஒப்பந்தத்தின் காரணமாக நமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அணுசக்தித் திட்டத்திற்குக் குறிப்பிடும்படியான பாதிப்பு ஏதும் இராது.

இந்திய-அமெரிக்க நாடுகளின் இருதரப்பு உறவில் மாட்டிக்கொண்டு 123 ஒப்பந்தம் திணறும் இவ்வேளையில், அவ்வொப்பந்தத்தின் மூலம் எந்த நாட்டோ டு வேண்டுமானாலும் அணுசக்தித் தொழில்நுட்ப வர்த்தகத்தை நாம் செய்துகொள்ள முடியும் என்பதையும் கவனிக்க வேண்டியது மிக முக்கியமாகும். 'தகவலளித்த ஓராண்டுக்குள் அணுசக்தி எரிபொருள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது வழங்கப்பட்ட எந்தக் கருவியையும் திரும்ப எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்' என்னும் ஒப்பந்தத்தின் ஒரு அம்சத்திற்கு அழுத்தம் தந்து சிலர் பேசுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவிடமிருந்து மட்டுமே இந்தியாவால் அணுசக்தித் தொழில்நுட்பத்தை வாங்க முடியும் என்ற நிர்ப்பந்தம் நம் நாட்டுக்கு இல்லை என்னும் உத்தரவாதத்தை இப்பேரவையின் மதிப்புமிக்க உறுப்பினர்களுக்கு இந்த அரசு வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். ஒருவேளை அமெரிக்க அரசு நமக்கு வழங்கும் சரக்குகளில் தடையேதும் ஏற்பட்டால் அணுசக்தி ஏற்றுமதிசெய்யும் குழுவிலுள்ள நாடுகள் ஏதேனும் நமக்கு உதவிபுரியுமா என்பது பற்றியும் நாங்கள் அரசிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

மேற்குறிப்பிட்ட விவரங்களனைத்தும் மிகவும் முக்கியம் என்றபோதிலும், நமது பரந்த தொலை நோக்கிலிருந்து நமது கவனத்தை இவை சிதறடிக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த 123 ஒப்பந்தமானது தானாக ஒன்றும் வந்துவிடவில்லை. இதை ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்திய பாரதீய ஜனதா கட்சி முதல் இப்பொழுதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் புதுதில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள இன்றைய அரசுகள்வரை, இந்த ஒப்பந்தத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்கான - அதாவது, 300 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தல், பாலின மற்றும் ஜாதிப் பாகுபாடு, கிராமப்புறத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான - ஒரு கருவியாகவே கருதிவந்துள்ளனர்.

ஐயா! எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் மதிப்புமிக்க இச்சபையில் சீன ஆக்கிரமிப்பைப் பற்றி 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்றிருந்த பின்வரும் வார்த்தைகளோடு என் உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அறிஞர் அண்ணா கூறியிருந்தார்: "நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உருவாக்கப்பட்டுவரும் பெருமைமிகு வருகைப் பதிவேட்டில் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) பெயரைப் பதிவுசெய்கிறேன்!".

நன்றி!

தமிழில்: சுப்ரபாலா

அடிக்குறிப்பு: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் பொறுப்பேற்ற கவிஞர் கனிமொழி அந்த அவையில் ஆற்றிய முதல் உரை.

இவ்வுரை மாநிலங்களவைக்கான இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

kalachuvadu.com

No comments: