Thursday, May 26, 2011

தமிழக நர்சுகள் 1000 பேர் 3 நாட்களாக உயிருக்கு போராட்டம்.


ஏமனில் அதிபருக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபரின் ஆதரவாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அங்கு பணியாற்றி வரும் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நர்சுகள் பரிதவிக்கின்றனர்.

ராணுவ மருத்துவமனையில் உள்ள அவர்கள், குண்டு தாக்குதலுக்கு பயந்து 3 நாட்களாக இருட்டறையில் பதுங்கி, பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் தலைநகர் சானா அருகே ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மிலிட்டரி மருத்துவமனை உள்ளது. தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நர்சாக பணியாற்றி வருகின்றனர். தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உள்ளனர்.

அந்நாட்டில் அதிபர் அலிஅப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி தலைவரான ஷேக்சாதிக் அல்அமரின் ஆதரவாளர்களான பழங்குடியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தலைநகர் சனாவில் கடந்த சில நாட்களாக அதிபரின் ஆதரவாளர் களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஏமனின் முக்கிய எதிர்க்கட்சியான ஹாஷித் என்ற பழங்குடியின கூட்டுக்குழுவின் தலைவர் அமர் வீடு மீது அதிபரின் ஆதரவாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியாயினர்.

இதையடுத்து தேசிய செய்தி ஒலிபரப்பு நிறுவனமான சபா, தேசிய விமான நிலைய அலுவலகமான ஏமனியா ஆகியவற்றின் கட்டிடங்களை பழங்குடியினர் நேற்று கைப்பற்றினர். உள்துறை அமைச்சக கட்டிடத்துக்கும் தீ வைக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிவரும் இந்திய நர்சுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

நர்சுகள் தங்கியுள்ள விடுதியில் சில தினங்களுக்கு முன்பு அதிபருக்கு எதிரான வர்கள் ‘டைம்பார்ம்’ வைத்தனர். இதை ராணுவத்தினர் கண்டுபிடித்து அகற்றியதால் நர்சுகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியினர் கடந்த 3 நாட்களாக நர்சுகள் தங்கியுள்ள விடுதியை நோக்கி கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்ட வண்ணமும் உள்ளனர். ராணுவத்தினரும் நர்சுகளுக்கு பாதுகாப்பாக சண்டையிட்டு வருகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் நர்சுகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். உயிருக்கு பயந்து அனைவரும் விடுதியில் உள்ள கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளனர். இருட்டறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி 3 நாட்களாக உயிருக்கு போராடும் பரிதாபம் நேர்ந்துள்ளது.

ஒரு பக்கம் தாக்குதல், மற்றொரு பக்கம் உணவு, தண்ணீர் இன்றி நர்சுகள் தவித்து வருகின்றனர். பலரது செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி வருகிறது. சிலர் செல்போன் மூலம் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றும்படி கதறி அழுகின்றனர்.

எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் நர்சுகளை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இந்திய தூதரகம் இறங்கி உள்ளது. போரில் காயம்படும் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நர்சுகளை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏமன் அரசும் ராணுவமும் மறுத்து வருகிறது.

இதற்கிடையே, ஏமனில் சிக்கியுள்ள நர்சுகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றிரவு நெல்லை எம்.பி. ராமசுப்புவை சந்தித்து முறையிட்டனர். அவர் கூறும்போது, “ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரால் எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கியுள்ள நர்சுகளின் உறவினர்கள் என்னிடம் முறையிட்டனர்.

உடனடியாக டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தேன். ஜப்பானில் சிக்கி தவித்த 40 தமிழர்களை காப்பாற்றியதுபோல், இவர்களையும் ஓரிரு நாட்களில் மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments: