Thursday, May 26, 2011

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து சீரடைந்தது : எரிமலையால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியது .

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து சீரடைந்தது: எரிமலை சாம்பலால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியது

இங்கிலாந்து அருகே ஐஸ்லாந்து நாட்டில் உள்ள கிரீம்ஸ்வோடின் என்ற எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்தது. இதன் காரணமாக அதன் உச்சியில் இருந்து நெருப்பும், சாம்பலும் வெளியேறியது.

எரிமலையின் சாம்பல் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் வானத்தில் பரவியது. எரிமலை சாம்பல் விமானங்களின் என்ஜினில் புகுந்தால் அவை செயல் இழக்கும் ஆபத்து உள்ளதால், நேற்று முன்தினம் இங்கிலாந்திலும், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியில் பெர்லின், ஹம்பெர்க், பெர்மன் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் நேற்று பல மணி நேரம் மூடப்பட்டன. ஜெர்மனியில் நேற்று சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பெர்லின் நகரத்துக்கு வரும் மற்றும் அங்கு இருந்து கிளம்பும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு ஜெர்மனியில் எதிர்ப்பு கிளம்பியது.

இது அளவுக்கு அதிகமான எதிர்விளைவு என்றும், அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். எரிமலை சாம்பல் வடக்கு நோக்கி நகர தொடங்கியதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் விமானங்களை ரத்து செய்தன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனில் இருந்து ஹம்பர்க் செல்லும் ஒரு விமானத் தையும், ஹம்பர்க்கில் இருந்து லண்டன் வரும் 2 விமானங்களையும் ரத்து செய்தது.

இதற்கிடையே, கிரீம்ஸ்வோடின் எரிமலையின் சீற்றம் தணிந்தது. அதில் இருந்து சாம்பல் வெளியேறுவது நின்று போனது. இதனால் வானம் தெளிவானதை தொடர்ந்து, இங்கிலாந்து விமானம் ஒன்று சோதனை ஓட்டமாக பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்தப்பட்டது. அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் திரும்பியது. இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி சீரடைந்தது.

ஜெர்மனியில் பெர்லின் ஹம்பர்க், பெர்மன் ஆகிய நகரங்களில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டது.

இதேபோல், டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் 2 விமானங்களும் புறப்பட்டு சென்றன. கடந்த ஆண்டு இதுபோல் எரிமலை வெடித்ததால் ஒரு வாரத்துக்கு மேல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் உலக விமானப் போக்குவரத்து தொழிலுக்கு அப்போது ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

No comments: