Thursday, May 26, 2011

டெல்லி அருகே குடியிருப்புகள் மீது விமானம் விழுந்தது எப்படி?

டெல்லி அருகே பெண்கள்-டாக்டர்கள் உள்பட 10 பேர் பலி: குடியிருப்புகள் மீது விமானம் விழுந்தது எப்படி?; விசாரணை நடத்த உத்தரவு

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 2 பைலட்டுகள், 2 டாக்டர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

இரவு 10.35 மணிக்கு விமானம் டெல்லியை நெருங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது. அடுத்த நிமிடமே விமானம் டெல்லி அருகே அரியானாவில் உள்ள பரீதாபாத்தில் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது.

அப்போது அந்தப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. குடியிருப்புவாசிகள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அங்கு விமானம் விழுந்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்பு படையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். அங்கு ஏராளமான மக்கள் கூடி விட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

விமானத்தின் பாகங்கள் குடியிருப்புகள் மீது ஆங்காங்கே விழுந்து சிதறிக் கிடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும், குடியிருப்புகளில் இருந்த 3 பெண்களும் கருகி பலியானார்கள். மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டனர்.

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. விமானம் சென்றபோது அந்தப்பகுதியில் புழுதிப்புயல் வீசியது. இதில் விமானம் சிக்கியதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் மீது விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து விசாரணைக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக விமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விபத்துக்குள்ளான விமானம் ஒரு என்ஜின் கொண்ட சிறியரக ஆம்புலன்ஸ் விமானம் ஆகும். டெல்லி ஜவகர் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.

விபத்து குறித்து விமான போக்குவரத்து அதிகாரி கூறுகையில், விமானம் டெல்லியை நெருங்கிக் கொண்டு இருந்தபோது திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராடாரிலும் தெரியவில்லை. அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கி விட்டது என்றார்.

விமான விபத்து நடந்த இடத்தில் தெருக்களில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்தன. என்ஜின் ஒரு பக்கம், இறக்கை ஒரு பக்கம் தனித்தனியாக விழுந்து எரிந்து கொண்டு இருந்தது. விமானத்தில் கொண்டு சென்ற நோயாளிக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர், ஐஸ் பாக்ஸ், மருத்துவ உபகரணங்களும் சிதறிக்கிடந்தன.

விபத்து நடந்த நேரம் இரவு என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் விமானம் விழுந்து நொறுங்கியதைப் பார்த்து ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தனர்.

இதுபற்றி குடியிருப்பு வாசி ரோகன் கூறுகையில், நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. பெரிய அளவில் தீப்பிழம்பும் காணப்பட்டது. உடனே நான் வீட்டை விட்டு வெளியேறி வந்து பார்த்த போது விமானம் நொறுங்கி கிடந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்.உடனே அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு தீயை அணைப்பதில் ஈடுபட்டோம் என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த லதாதேவி என்ற பெண் கூறும்போது, நான் தூங்கிக்கொண்டு இருந்த போது பயங்கர சத்தம் கேட்டது. ஏதோ குண்டு வெடித்து விட்டது என்று நினைத்தேன். அப்போது பெரிய பொருள் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. நான் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்றார்.

விமானம் விழுந்ததில் குடியிருப்புவாசிகள் 3 பேர் தீக்காயத்துடன் தப்பினார்கள். காயம் அடைந்த ஓம்கார் என்பவர் கூறுகையில், நான் விமானம் விழுந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டேன். கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு தவித்தனர். அவர்களைச் சுற்றி தீ எரிந்து கொண்டு இருந்தது. நான் முதல் மாடியில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு தீ எரிந்து கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.

விமானம் விழுந்ததில் பலியான குடியிருப்புவாசிகள் பெயர் வேதவதி, அவரது மகள் சரிதா (19), மருமகள் ராணி (20) என தெரிய வந்தது. ஹர்விந்தர், சதீஷ், ஓம்கார் ஆகியோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அங்கு மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. விமான விபத்தில் பலியான 3 பெண்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் உதவி வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.

No comments: