Thursday, May 26, 2011

மெட்ரிக் பள்ளிகளை ஜூன் 15-க்கு முன் திறந்தால் கடும் நடவடிக்கை ! - தமிழக அரசு.

தமிழக அரசின் உத்தரவை மீறி, வரும் ஜூன் 15-க்கு முன் தனியார் பள்ளிகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்புக்கு வரை மட்டும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டான 2011-2012-ல் எஸ்.எஸ்.எல்.சி.வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே கோடை விடுமுறை முடிந்து 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும் எனவே இந்த ஆண்டு பழைய பாட திட்டங்களை தொடரலாம் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

பாடப் புத்தங்களைத் தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் 15-ந்தேதி திறக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஒரு சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று கூறி ஜூன் 1-ம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளன. இதையறிந்த மெட்ரிக் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ந்தேதிதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அரசு அறிவிப்புக்கு முன்பு விதி மீறி திறக்கப்படும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: