Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வி நிறுத்தம் : 8-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.

சமச்சீர் கல்வி நிறுத்தம்: 8-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னையைச் சேர்ந்த வக்கீல் சியாம் சுந்தர் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமுல்படுத்த கேட்டு ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை கொண்டு வருவது குறித்து முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்தி அரசுக்கு 2007-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த அரசு சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதாக அறிவித்தது. 2010-ல் இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை உறுதி செய்தது. 2010-2011-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமுல்படுத்தப் பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு இதற்காக ரூ.200 கோடி வரை அரசு செலவிட்டுள்ளது. ரூ.9 கோடி மதிப்பில் பாடப்புத்த கங்கள் அச்சிடப்பட்டுள் ளன. இந்த நிலையில் தமிழகத் தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

பழைய கல்விமுறையே தொடர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்திருப்ப தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென புதிய நிபுணர் குழுவை அரசு அமைக்க இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது. எந்த ஒரு நிபுணர் குழுவின் ஆலோசனையையும் பொறாமலேயே அமைச்ச ரவை முடிவு செய்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது.

தற்போதுள்ள பழைய கல்வி முறையே தொடரும் என அறிவித்து அதற்கான பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற் காக பள்ளிகளை திறப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அரசியல் சார்பானது. கொள்கை முடிவு என்று கூறி அரசு இதில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் இந்த விஷயத்தில் மாணவர்கள் நலன், பொது மக்கள் நலன் உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே. பாலு ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, சட்டப்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவு இது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்று கூற முடியாது என்றார். சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, தமிழக அரசு எடுத்த முடிவு சட்டத்தை மீறிய செயல் ஆகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக செயல்படும் விதமாக அரசு முடிவு எடுத்துள்ளது என்றார்.

தமிழகஅரசுக்கு ஆதரவாக வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழு அமைக் கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாதங்களை முன் வைக்க என்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் கூறியதாவது:-

சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசு அதிக அளவில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மக்களின் வரிப்பணம். நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படை யில்தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எளிதாக உதாசீனப் படுத்த முடியாது. சட்டத்தை மீறும் வகையில் அமைச்சரவை சட்டத்தில் முடிவு எடுக்க முடியுமா? நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு அரசு ஜூன் 8-ந்தேதிக்குள் விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வழக்கு விசாரணையும் ஜூன் 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments: