Thursday, May 26, 2011

கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டுவீச்சு.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள கே.சென்னம்பட்டியில் கடந்த இரு நாட்களாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று இரவு கோயிலின் எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நாடகம் நடந்தது.

நாடகம் முடிந்ததும் ஒரு தரப்பைச் சேர்ந்த 20 பேர் தங்களது தெருவில் உள்ள ஒரு மணல் மேட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மணல் மேட்டில் தூங்கிக் கொண்டிருந்த வர்கள் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர்.

சாலையில் விழுந்த குண்டு வெடித்துச் சிதறியதும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்தனர். இதையடுத்து குண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

அப்போது ரோட்டில் சிதறியிருந்த பெட்ரோல் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ரோடு முழுவதும் கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடந்தன.

பெட்ரோல் குண்டு தவறுதலாக சாலையில் விழுந்ததால் 20 பேரும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கள்ளிக்குடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் சவுரியப்பன் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க் அதிகாலையிலேயே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே இரு தரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொழில் ஈடுபட்டவர்களுக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தடுக்கச் சென்ற எஸ்.பி.,யை ஒரு கும்பல் தாக்க முயன்றதும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று அதிகாலை திருமங்கலம் அருகே மற்றொரு கிராமத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனால் மோதல் சூழ்நிலை நிலவும் கிராமங்களில் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

No comments: