Saturday, July 23, 2011

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...?



நேற்று, சேலத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் ஆய்வு நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சென்றார்கள்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில், 145 கோடி ரூபாய் செலவில், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்டப்பட்டது.

கட்டிட வேலைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், மருத்துவ கருவிகள், ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, மற்றும் பல்வேறு வகையான ஆய்வக உபகரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரப்படுகிறது.

தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் இல்லமால் இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பகுதி மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் ஒருநாள் இரவு சத்தமில்லாமல் மருத்துவமனையை அதிகாரிகள் இழுத்து மூடினார்கள்.

இது பற்றி பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்திகள் வந்ததை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை மறுபடியும் திறக்க்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மருத்துவ மனையை செயல்படுத்த ஜெயலலிதா விரும்பவில்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 12, மணிக்கு மருத்துவ மனையை பார்வையிட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிசாமி இருவரும் கட்சிக்காரர்கள் புடைசூழ மருத்துவமனைக்கு வந்தார்கள்.

மதியம் 1.30 மணிவரை மருத்துவமனையை சுற்றி பார்த்துவிட்டு வந்த அமைச்சர்களுடன், எம்.பி. செம்மலை, மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வசுந்தரா, சுகாதாரத்துறை இயக்குனர் கிரிஜாவைத்தியநாதன், சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் உட்பட்ட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்டிடமானது முற்றிலும் ஏ.சி.வசதி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி முற்றிலும் அமைக்கப்பட்டுவிட்டாலும் அது இன்னும் முழுமையாக இயங்கவில்லை. நேற்று மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் பார்வையிட்டபோது, மருத்துவ மனையின் பராமரிப்பு செலவு குறித்தும், ஏ.சி. இயங்குவதால் ஆகும் செலவு குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது உடன் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் பராமரிப்பு செலவு மட்டுமே ஆண்டுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும், என்றார். உடனே அமைச்சர் விஜய், அவ்வளவு பணம் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்குவது கடினம். எனவே, ஏ.சி.க்கு பதிலாக மின் விசிறி அமைத்தால் என்ன? எலக்ட்ரிக் வேலை செய்தவர்கள் அதை மாற்றியமைக்க முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ஏற்கனவே கட்டிடம் முழுமையும் ஏ.சி. வசதி அமைப்பில்தான் கட்டப்பட்டுள்ளது. மாற்றுவது சிரமம், மாற்ற நினைத்தால் அனைத்து மின் அமைப்புகளையும் மாற்றவேண்டியதிருக்கும். இதற்கு நிறைய செலவும், நேரமும் ஆகும் என்று தெரிவித்தனர்.

பின்பு வெளியே வந்த அமைச்சர்களிடம், மருத்துவமனை தொடர்ந்து செயல்படுமா...? தேவையான உபகரணங்கள் வாங்கப்படுமா...? இப்போது இங்கு பார்வையிட வந்ததின் நோக்கம் என்ன...? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக அதிகாரிகளிடம் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.

கட்சிகாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன், கண்காணிப்பாளர் அறையில் ஒருமணி நேரம் கலந்து பேசிவிட்டு வெளியே வந்த அமைச்சரிடம் என்ன முடிவு செய்யப்பட்டது என்று கேட்டதற்கு இன்னும் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது, பத்து நாளில் அந்த வேலைகளை முடிக்கச்சொல்லியுள்ளோம் என்று ஒரே வரியில் பதில் சொலிவிட்டு பறந்துவிட்டார்.

No comments: