Saturday, July 23, 2011

திமுக போட்டால் வரி... ஜெயலலிதா போட்டால் நிதியா? - கருணாநிதி கேள்வி.



திமுக அரசு விதித்தால் வரி, அதையே ஜெயலலிதா அறிவித்தால் நிதி என்று கூறுவதா என்று அதிமுகவின் தோழமை கட்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கேள்வி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றிருக்கிறார்களே?

பதில்: இது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவாகும். 1996-ம் ஆண்டு தி.மு.க. 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோதே, உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து நடத்தியபோது, அனைத்துப் பொறுப்புகளிலும் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்து பெரும் சாதனைபுரிந்ததின் காரணமாக அப்போது தமிழகத்தில் 44,143 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்கும் நிலையை தி.மு.க. அரசு செய்து காட்டியது.

உள்ளாட்சிகளுக்கு தற்போது செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பைப்போல, பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கும் மகளிருக்கான இடஒதுக்கீடு விரைவிலே நடைமுறைக்கு வரவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் விருப்பமும், வேண்டுகோளுமாகும்.

கேள்வி: துணி மற்றும் துணிப்பொருட்கள் மீதான 5 சதவீத வரி உயர்வினை ஜெயலலிதா ரத்து செய்து அறிவிப்பதாக செய்தி வந்துள்ளதே?

பதில்: சட்டப்பேரவை கூடுகின்ற நாள் அறிவிக்கப்பட்ட பிறகு, 4,200 கோடி ரூபாய்க்கு வரி விதிப்பு என்பது பேரவை மரபுகளுக்கு மாறானது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால் அரசு வரி விதிப்பு செய்தபிறகு, ஜவுளி உற்பத்தியாளர்கள் அரசினரைப் பார்த்து கோரிக்கை வைத்ததாக செய்தி வந்தது.

அவர்கள் வைத்த கோரிக்கையை அமைச்சரவை பரிசீலித்து (?) உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அரசு அறிவிப்பில் ஜவுளித்தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளை கருத்திலே கொண்டு இந்த முடிவினை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் வரி விதிப்புக்கு முன்பு அரசு அதிகாரிகள் இந்த வரி உயர்வினை செய்தால் ஜவுளித்தொழில் பாதிக்கும் என்று இந்த அரசினருக்குத் தெரியவில்லையா? அல்லது அந்தத் துறையின் அதிகாரிகள்தான் எடுத்துக்கூறவில்லையா?

கேள்வி: சமச்சீர் கல்வி பாடங்கள் இணைய தளத்திலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டதாகவும், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதை 26-ந் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே வரும்போது எடுத்துரைக்கக்கூடும்.

கேள்வி: தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற தேவையான கிரைண்டர்களை தமிழக அரசு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்போவதாகக் கூறி தமிழகத்திலே உள்ள கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்களே?

பதில்: அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது இதுவரை திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சீனா நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்கள், தமிழக அரசினரிடம் நேரடியாகப் பேசி என்னென்ன நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தமிழ்நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்களும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முன்வரலாமே?

தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற சட்டமன்றத்திலே உள்ள எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளையெல்லாம் குழுவிலே நியமித்து, அவர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. தற்போதுதான் அப்படியெல்லாம் இல்லையே?

கேள்வி: சமச்சீர் கல்வி பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அவசர கதியில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் நான்காண்டுகளாக கல்வித்துறை நிபுணர்கள் தனித்தனியே ஆய்வு செய்து சமச்சீர் பாடத்திட்டத்தை தயாரித்திருப்பதாகவும், அதில் குறைகள் எதுவுமில்லை என்றும் விளக்கியிருக்கிறார்கள்.

கேள்வி: ஜெயலலிதா ரூ.66 கோடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதிக்கக்கோரும் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருக்கிறதே?

பதில்: ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 14 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. சாட்சிகள் விசாரணை எல்லாம் முறைப்படி முடிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று சசிகலாவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டார். ஆனாலும் வழக்கை மேலும் இழுத்தடிக்க கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதிலேதான் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கேசவ நாராயண், சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதி கோரும் மேல்முறையீட்டு மனு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர் நானையாவை நியமித்ததை நீதிமன்றம் ஆட்சேபித்ததோடு, ஆச்சார்யாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இந்த வழக்கை நடத்துவதை ஏற்கமுடியாது என்றும், அது நீதியை மூழ்கடிக்கும் முயற்சி என்றும், ஜெயலலிதா தரப்பினருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து, தனி நீதிமன்றத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: சமச்சீர் கல்வி முறையில் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை வரவேற்று உங்களைக் குறை கூறிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர், தமிழக அரசிடம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்ட பிறகும், அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்ததைப்பற்றி உங்கள் கருத்து?

பதில்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் அனைத்தும் வைத்த வேண்டுகோளை அ.தி.மு.க. அரசு ஏற்காமல்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதை தா.பாண்டியன் இன்றில்லாவிட்டாலும், வெகுவிரைவில் உணருவார். இந்தப் பிரச்சினையைப் போலத்தான் ஜெயலலிதா அரசு புதிதாக ரூ.4,200 கோடி வரி விதித்தது பற்றி நான் விடுத்த அறிக்கைக்கும் பதில் கூறியிருந்தார்.

ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த எட்டயபுரம் நகரச்செயலாளரும், தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினருமான குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசின் வரி விதிப்புக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம் என்றும், காங்கிரஸ் கூட்டினால் வரி, ஜெயலலிதா கூட்டினால் மட்டும் அதற்குப் பெயர் நிதியா என்று பாண்டியனுக்குக் கண்டனமே தெரிவித்திருக்கிறார்.

1 comment:

சிவா சின்னப்பொடி said...

ஈழத்து சகோதர யுத்தம் பற்றி பேசும் இந்த கிழட்டு நரி அதிமுவுடனான சகோதர யத்தத்தை விடாது போலிருக்கு