Monday, July 4, 2011

13 வயது சிறுனை ராணுவம் சுட்டுக் கொன்றதை ஏற்கவே முடியாது - ஜெயலலிதா கண்டனம்.சென்னையில் பழம் பறிப்பதற்காக ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த 13 வயது சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிக் குண்டு சிறுவனின் தலையை துளைத்து பிளந்து விட்டது.

சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் தில்ஷன். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ராணுவக் குடியிருப்புக்குள் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி வந்து எடுப்பது வழக்கம். அந்த சமயத்தில் அவர்களைப் பிடித்து எச்சரித்து ராணுவ பாதுகாப்பு சென்ட்ரி அனுப்பி விடுவார்.

ஆனால் நேற்று சென்ட்ரி சற்று கொடூரமாக நடந்து கொண்டார். சிறுவன் தில்ஷனை நோக்கி சுட்டு விட்டார். தலையில் குண்டு பாய்ந்து தில்ஷன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தில்ஷனின் பெற்றோரிடம் நடந்ததைக் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் ராணுவக் குடியிருப்பில் திரண்டு விட்டனர். ஆனால் தில்ஷனைக் காணவில்லை. இதுகுறித்துக் கேட்டபோது சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதை நம்ப மறுத்த பொதுமக்கள் அங்கேயே சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சிலர் அரசு பொது மருத்துவ்மனைக்குச் சென்று பார்த்தபோது உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பொது மருத்துவமனைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் வலியுறுத்தியபோது ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் போலீஸாரை நோக்கி தாக்குதலில் குதித்தனர். கல்வீசி அவர்கள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் இறந்து விட்டதாக தகவல் வெளியாகவே பதட்டம் மேலும் அதிகரித்தது.

தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயக்குமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

சம்பவம் குறித்து வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தாயாரின் வேதனை.

சிறுவன் தில்ஷனின் தாயார் கலைவாணி தனது மகனைப் பறி கொடுத்த வேதனையில் கதறிக் குமுறினார். அவர் கூறுகையில்,

எனது கணவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது வேலைக்கு போகாமல் உள்ளார். இதனால் எனது 3 குழந்தைகளையும் படிப்பை நிறுத்திவிட்டு கவர் செய்யும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினேன். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில்தான் குடும்பம் நடக்கிறது.

என் பிள்ளை தில்ஷன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து வாதாம் காய் பறித்துள்ளான். அவனை அடித்து துரத்தியிருக்கலாம். ஆனால் பாவிகள் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் காக்கையை சுடுவதுபோல் சுட்டு இருக்கிறார்கள்.

நான் வந்து பார்த்தபோது குண்டுபாய்ந்த நிலையில் எனது மகன் காக்கை செத்து தொங்குவதுபோல மதில்சுவரில் தொங்கினான். எனது மகனை சுட்ட பாவியை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும். எனது மகன் தில்ஷன் 6-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். குடும்ப கஷ்டத்தால்தான் அவனை படிக்கவைக்க முடியவில்லை என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

பழம் பறிக்க ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவத்தின் செயல் யாராலும் ஏற்க முடியாதது. சுட்டுக் கொன்ற ராணுவ வீரரை ராணுவம், போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவரின் 13 வயது மகன் தில்ஷன் நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் ஏற முயன்றபோது அங்குள்ள ராணுவ காவலாளியால் சுடப்பட்டார்.

மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிந்து கொண்டிருக்க முடியும். இருப்பினும், அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனது ஆணையின் பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதி இந்த கொடூரச் செயலை செய்த ராணுவ வீரரை உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உள்ளார். அந்த ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுவன் தில்ஷனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

பெற்றோரிடம் நிதியுதவி வழங்கப்பட்டது

இதையடுத்து தில்ஷனின் பெற்றோரிடம் ரூ. 5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை முதல்வர் உத்தரவின்பேரில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி ஆறுதல் கூறினார்.

ராணுவம் மறுப்பு

இதற்கிடையே, ராணுவ வீரர்கள் யாரும் சிறுவனை சுட்டுக் கொல்லவில்லை என்று நிர்வாகப் பிரிவு பிரிகேடியர் சசி நாயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க விட மாட்டோம். போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர், ராணுவ போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள வீடுகளிலும், அப்பகுதியிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் தவறு செய்தது யார் என்பது தெரிய வரும்.

ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு வீரர்கள் யாரும் அந்த சமயத்தில் இல்லை. எனவே ராணுவ வீரர்கள் சுட்டிருக்க வாய்ப்பில்லை.

தடவியல் அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.

சிறுவன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் - பிரேதப் பரிசோதனை அறிக்கை

சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் எந்தப் பாதுகாவலரும் இல்லை. சாதாரண குச்சியுடன் தான் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார் என்று ராணுவ பிரிகேடியர் சசி நாயர் என்பவர் கூறியிருந்தார்.

மேலும், சிறுவர்களை விரட்ட லேசான தடியடி நடத்தியபோது சுற்றுச் சுவர் கம்பியில் மோதி சிறுவன் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்றும் ராணுவத் தரப்பு மறுத்திருந்தது.

ஆனால் தற்போது சிறுவன் தில்ஷன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யார் சிறுவனை சுட்டது என்பது பெரும் குழப்பமாகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தின்போது தில்ஷனுடன் இருந்த 2 சிறுவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவம் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை தரவிப்பில் ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments: