Friday, May 13, 2011

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி:    தங்கபாலுவும் வெற்றி வாய்ப்பை இழந்தார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த தோல்வியை மக்கள் அளித்துள்ளனர். தமிழர்கள் அளித்துள்ள தீர்ப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த போது மிக, மிக கறாராக நடந்து கொண்டது.

திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி 63 தொகுதிகளை தி.மு.க.விடம் இருந்து பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பிரச்சினையால் பிரசாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூரில் திடீர் வேட்பாளர் ஆனது காங்கிரசாரிடம் மட்டுமின்றி மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இன்று தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் உள்ளது.

குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஓசூர், பட்டுக்கோட்டை ஆகிய 5 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு “கை” கொடுத்துள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 23,789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் திடீர் வேட்பாளராகி போட்டியிட்டார். ஆனால் மயிலாப்பூர் மக்களை அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தோல்வியை தழுவி உள்ளார். அவரைப் போலவே பீட்டர்அல்போன்ஸ், ஞானசேகரன், யசோதா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். காங்கிரசை தமிழக வாக்காளர்கள் ஒதுக்கி விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

No comments: