உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, அதற்கு என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. அதில் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,
உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.
வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே கருத்தை ஐஎம்எப் தலைவரும் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு உலக வங்கியின் தலைவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.
"தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.
கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.
வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்," என்று கூறினார்.
No comments:
Post a Comment