டில்லியில் அரசியல் புயலைக் கிளப்ப இரண்டாவது கடிதமும் வெளியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு கடிதம் வெளியாகி பலத்த அரசியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டதை சமாளிக்கவே மத்திய அரசு திணறுகிறது. இந்த இரண்டாவது கடிதம், அரசியலில் எப்படியான பூகம்பத்தைக் கிளப்பப் போகின்றதோ!
இரண்டாவது கடிதம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதப்பட்டுள்ளது.
தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, அவர் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு, தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். அத்துடன,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு மார்க்கெட் ரேட்டில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அதிக பணம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும், அமைச்சரவைப் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை குழுவின் பரிந்துரை, நேர்மையான வழிமுறை. அந்த வழிமுறையில் அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.
ஆனால், தயாநிதியின் வழிமுறை என்னவென்றால், அதிக பணம் கொடுக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்காமல், எந்த நிறுவனம் முதலில் வந்து உரிமம் கேட்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் கொடுப்பது!
அதாவது, அரசுக்கு நஷ்டம் ஏற்பட வைத்து, முதலில் வரும் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கொடுக்கும் வழிமுறை அது. கொள்ளை லாபம் பெற்ற நிறுவனங்கள், அதற்கு பிரதி உபகாரமாக, கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுப்பார்கள்.
தயாநிதி மாறனின் இந்த கடிதத்துக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால்தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றது என்பதே தற்போது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, லட்டு மாதிரிக் கிடைத்துள்ளது, தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதம்.
தகவல் அறியும் சட்டத்தின்படிதான் இந்தக் கடிதமும் பெறப்பட்டுள்ளது. (ப.சிதம்பரத்துக்கு எதிரான முதல் கடிதம் பெறப்பட்டதும், அப்படித்தான்)
இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா? தயாநிதியால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை அப்படியே காப்பியடித்துத்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயற்பட்டார். அதற்காக அவர் திகார் ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.
ஆனால் கார்ப்பரேட் முதலாளியான தயாநிதி மாறன் மீது கை வைக்க மத்திய அரசு அஞ்சுகிறது.
மூத்த அரசியல்வாதியான கருணாநிதியின் மகள் கனிமொழியை அசால்ட்டாக கைது செய்து சிறைவைத்த மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளி மீது கை வைக்க யோசிக்கிறது.
அரசியல் நெருக்கடியைவிட, கார்ப்பரேட் முதலாளிகளின் நெருக்கடிக்கு இந்திய அரசு தலைவணங்குகிறது.
No comments:
Post a Comment