Tuesday, July 26, 2011

தமிழ் வழியில் படித்த 12 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்ந்தனர்.

தமிழ் வழியில் படித்த 12 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்ந்தனர்: இ.சி.இ., மெக்கானிக்கல் பிரிவை அதிகம் தேர்வு செய்தனர்

தமிழகத்தில் உள்ள 500 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று வரை 37,506 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில் 12, 128 பேர் பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்த சேர்க்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பிளஸ்-2 வரை படித்து தேர்ச்சி பெற்ற இவர்களில் 3451 பேர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவு விரும்பி தேர்வு செய்துள்ளனர். 2716 மாணவர்கள் மெக்கானிக்கல் பாடப்பிரிவிலும் 1594 பேர் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவிலும் 1307 பேர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் இதே போல் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங், பயோ-டெக்னாலஜி, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்ப பாட பிரிவுகளிலும் சேர்ந்து உள்ளனர்.

பள்ளியில் ஆங்கில வழியில் படித்த 30 மாணவர்கள் சிவில் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில்,

தமிழ் வழியில் படித்து விட்டு வரும் மாணவர்களுக்கு சிறப்பு திறன் வகுப்பு நடத்தப்படும். முதல் வருடத்தில் அவர்களுக்கு பாதி தமிழும், பாதி ஆங்கிலமும் கலந்தவாறு பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த முறை ஏற்கனவே அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ளது. இதற்காக ஆங்கில பேச்சு திறன் வகுப்பும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஒரு வருடத்தில் ஆங்கில பேச்சாற்றல், எழுத்தாற்றலில் சிறந்து விளங்குவார்கள் என்றார்.

No comments: