Tuesday, July 26, 2011

' போர்க்குற்றவாளி ' ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்த விஜய்.



இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மறுத்தாரா விஜய்?

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், 'இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை,' என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம்.

உடனே கோபமாக, 'நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார் வன்னியரசு.

No comments: