Tuesday, July 26, 2011

நடப்பாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்.



ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவசாகம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் அமலாக்கப்பட்ட சமச்சீர் கல்வியை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. மேலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், இடம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளி முதலாளிகள்.

இந் நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாட திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின்படி நிபுணர்களின் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அதிமுக அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வித் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஜூலை 22ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

ஆனால், அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அடுத்த மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந் நிலையில் சமச்சீர் கல்வி கோரி பெற்றோர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கேபியட் மனு மீதும், சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதும் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்தது.

நீதிபதிகள் பன்கல், தீபக் வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கவில்லை. 2 மாதங்களாக மாணவர்கள் பாடப் புத்தங்கள் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அவர்களது கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என்றனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வி.ராவ், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவசாகம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அது எப்போது அமல்படுத்தப்படும்?, அதற்கு ஏதாவது காலக்கெடு வைத்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராவ், 2012ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும் என்றார்.

5 ஆண்டு அவகாசம் தேவை - இல.கணேசன்:

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரான இல.கணேசன், சமச்சீர் கல்வியில் தரமான பாடத் திட்டத்தை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

//இதற்கிடையே இரு தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரான இல.கணேசன், சமச்சீர் கல்வியில் தரமான பாடத் திட்டத்தை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.//வந்துட்டாருய்யா