Tuesday, July 26, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று நடந்த வாதத்தின் போது, நீதிபதி மீது கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்.


ராசாவின் நேற்றைய வாதம்.

ராசா நேற்றைய விசாரணையின்போது தனது வாதத்தில் அதிரடியான பல கருத்துக்களை தெரிவித்தார்.


“ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் நீங்கள் என்னைச் சிறையில் அடைக்க வேண்டுமென்றால், எனக்குமுன் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அனைவரையும் என்னுடன் சிறையில் அடைக்க வேண்டும். காரணம், அவர்கள் எதைச் செய்தார்களோ, அதையேதான் நானும் செய்தேன்” என்று அவரது வாதம் தொடங்கியபோதே, களைகட்டிவிட்டது.

ஸ்வான், மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஈகுவிட்டி விற்பனை விஷயத்திலும் தன்னைக் குற்றம் சாட்ட முடியாது என்றார் அவர். “இந்த இரு நிறுவனங்கள் பற்றிய விவகாரத்தை நான் கையாளுமுன், பிரதமரிடம் விளக்கமாகத் தெரிவித்திருந்தேன. அப்போதைய நிதியமைச்சரும் (ப.சிதம்பரம்) பிரதமருடன் அந்த அறையில் இருந்தார்” என்று அவர்கள் இருவரையும் உள்ளே இழுத்தார் ராசா.

“பிரதமரும் நிதியமைச்சரும், ‘இதில் எந்தத் தவறும் கிடையாது. சட்டத்துக்கு விரோதமாக காரியமல்ல’ என்று என்னிடம் தெரிவித்திருந்தனர். அதன் பின்னரே அந்த நடைமுறைக்கு நான் அனுமதி கொடுத்தேன்.” என்று பிரதமரையும் சபையில் இழுத்தபோது, முழு கோர்ட்டும் பரபரப்பாக ராசாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக அருண் ஷோரி, 26 லைசென்ஸ்களை வழங்கினார். தயாநிதி மாறன், 25 லைசென்ஸ்களை வழங்கினார். நான் (ஆ.ராசா) 122 லைசென்ஸ்களை வழங்கினேன். இங்கு எண்ணிக்கை எவ்வளவு என்பது முக்கியமல்ல. லைசென்ஸ்களை அவர்களும் வழங்கினார்கள். நானும் வழங்கினேன்.

இதில் என்னை மாத்திரம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? அவர்களை ஏன் யாருமே கேள்வி கேட்கவி்ல்லை?” என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் களையும் தனது வாதத்தில் இழுத்து விட்டார்.

“நான் இவ்வளவு எண்ணிக்கையில் லைசென்ஸ்களை வழங்கியதால்தான், போன் கட்டணங்கள் குறைந்தன. ஒரு சாதாரண ரிக்ஸாகாரர்கூட செல்போன் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில், இந்த நாடே என்னைப் பாராட்ட வேண்டும்” என்று ராசா பேசி முடித்தபோது, கோர்ட்டில் இருந்த அனைவருமே திகைத்துப்போன நிலையில் காணப்பட்டனர்.

இன்று நடந்த ராசாவின் வழக்கறிஞர்
வாதம்

2ஜி லைசென்ஸ்கள் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய தணிக்கைத் துறை அதிகாரி கூறியது அர்த்தமே அல்லாதது. இதை சிபிஐ கூட ஏற்கவில்லை.

ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலும் கூறியுள்ளனர். நான் செய்தது எல்லாமே அமைச்சரவை எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது மட்டும் தான்.

2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் சதி நடந்தது என்கிறார்கள். என்ன சதி நடந்தது?. யூனிடெக் நிறுவனத்துக்கும் லைசென்ஸ் தரப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனத்துக்கும் அடுத்த நாளே லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது. இதில் என்ன சதி நடந்தது என்கிறீர்கள்?.

வேண்டுமானால், இந்த விவகாரத்தில் தவறு நடந்துவிட்டது என்று சொல்லலாம். லைசென்களை ஒதுக்கியதில் சிறிய தவறுகள் மட்டுமே நடந்தன. மனிதனாகப் பிறந்த எல்லோருமே தவறு செய்வது இயற்கை தான். மற்றபடி சதி நடந்தது என்பதெல்லாம் கற்பனையான வாதம்.

ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் தங்களது பங்குகளை எடில்சாட் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தெரியும். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து பிரதமருக்கும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ராம் குறித்த கோப்புகள் ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அல்லது பிரதமருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் அமைச்சரவைக் குழுவை அமைத்திருக்கலாமே..? ஏன் அதை அவர் செய்யத் தவறினார்..? என ராசா கேள்வி எழுப்பினார்.

நான் இப்படிச் சொல்வதால் பிரதமரையும் சிதம்பரத்தையும் நான் குறி வைப்பதாக எழுதுகிறார்கள், சொல்கிறார்கள். அது தவறு. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை.

நான் சொல்லாததை எழுதுகிறார்கள். உண்மையை எழுதுவதாக இருந்தால், மீடியாக்களை நீதிமன்றத்துக்குள் அனுமதியுங்கள். இல்லாவிட்டால், அவர்களை (நிருபர்களை) வெளியே போகச் சொல்லுங்கள்.

இதனால் என்னை இந்த வழக்கிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்னை சிறையில் வைத்திருப்பதே சட்ட விரோதமானதாகும். இந்த நியாமற்ற நிலையை உருவாக்கியதே நீதிமன்றம் தான்.

என் மீதான இந்த வழக்கை எனது வழக்கறிஞர்கள் தவிடு பொடியாக்குவார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும்போது என் மீது சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்வதும் சரியல்ல.

எனக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், பிற நீதிமன்றங்களின் நெருக்குதல் தான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ரூ. 20,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதை ஒப்புக் கொண்டால், இதில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 14,000 கோடி வரை டாடாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தால் தான் ஏற்பட்டது என்றார்.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரிந்தே டிபி ரியாலிட்டி பங்குகள் விற்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பொறுத்தவரை முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.

ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

இந் நிலையில் இன்று பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் ப.சிதம்பரம் விஷயத்தில் தனது நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ள ராசா, அவரை இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நீதிபதி மீது கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்:

முன்னதாக இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் சுஷில்குமார் நீதிபதி ஓ.பி.சைனி மீது கோபத்தைக் காட்டினார்.

நீதிபதியிடம் அவர் கூறுகையில், நீங்கள் இந்த வழக்குக்காக மட்டுமே ஊதியம் பெறுகிறீர்கள். நான் வேறு வழக்குகளுக்காகவும் செல்ல வேண்டி உள்ளது. தினமும் உங்கள் முன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? இது மிகவும் நியாயமற்ற விசாரணையாக உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ய மட்டும் 6 மாதம் எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என்றார்.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: