சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு, பிரிமியர் மில் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேர்க்கப்பட்டார். அவரை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர்ஆக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு ஜாமீன் கொடுக்கலாம் என்று அதில் கூறியிருந்தது.
ஐகோர்ட்டி உத்தரவுப்படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்தார். அவருடன் டாக்டர் ஒருவர், உதவியாளர் சேகர், வக்கீல் மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் தனி அறையில் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கமேஸ்வரன், சீனிவாசன், ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும் விசாரணையை வீடியோ கிராபர்கள் 2 பேர் பதிவு செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்க போலீசார் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்டனர். ஆம். இல்லை என்ற முறையில் கேள்விகள் அமைந்திருந்தது. முதல் கேள்விக்கே வீரபாண்டி ஆறுமுகம் தெரியாது என்று பதில் அளித்தார். தொடர்ந்து 10 நிமிடத்துக்கு ஒரு முறை இடைவெளி விடப்பட்டது.
பகல் 11 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வெள்ளரி பிஞ்சு, மற்றும் காபி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரி, விநாயகா மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதித்தனர்.
தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்தார். ஆனால் உணவை வழங்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் ஓட்டலில் இருந்து அரிசி சாதம், வெண்டைக்காய் சாம்பார், மோர் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, தயிர், மோர், வெண்டைக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் இரவு 8 மணி வரை போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு பெரும்பாபலான கேள்விக்கு தெரியாது என்றே தெரிவித்தார். விசாரணை முடிந்ததும் வீரபாண்டி ஆறுமுகம் இரவில் வீட்டுக்கு செல்வதற்கு அனுமதிக்க கோரி அவரது வக்கீல் மூர்த்தி, உதவி கமிஷனர் பிச்சையிடம் எழுத்துபூர்வமாக அனுமதி கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினர்.
பின்னர் நேற்று இரவு வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சப்பாத்தி, ஜூஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே இரவில் தங்கவைக்கப்பட்டார். அவர் தூங்க போலீசார் சார்பில் ஒரு கட்டிலும் வழங்கப்பட்டது. பெட்ஷீட் உள்ளிட்டவை ஏற்கனவே அவரது வக்கீல் மூலம் வரவழைக்கப்பட்டு விட்டது. இரவில் போலீஸ் நிலையத்திலேயே வீரபாண்டி ஆறுமுகம் தூங்கினார். நேற்று மட்டும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் 103 கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.
போலீஸ் நிலையத்தில் தூங்கி எழுந்ததும் இன்று காலை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு டீ வழங்கப்பட்டது. தொடர்ந்து குளித்து முடித்து 2-வது நாள் விசாரணைக்கு தயாரானார். அவரிடம் உதவி கமிஷனர் பிச்சை 2-வது நாளாக விசாரணையை நடத்தினார். இன்றும் அவரிடம் மேலும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடந்து வருவதால் போலீஸ் நிலையத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தொண்டர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர்.
No comments:
Post a Comment