Friday, July 8, 2011

அனில் அம்பானி, தயாநிதி மாறனையும் 2 ஜி ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கு.



2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி, தயாநிதி மாறன் ஆகியோரையும் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், "அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனில் அம்பானியின் ஒப்புதலின்றி தங்கள் நிறுவனம் சார்பாக அவரது ஊழியர்கள் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை. எனவே, அவரையும் இவ்வழக்கில் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

"அனில் அம்பானிக்குக் தெரியாமல் அவரது ஊழியர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை அம்பானி பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைத் திஹார் சிறையில் சந்தித்து இவ்வழக்கை சந்திக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அம்பானி உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம், அலைக்கற்றை ஊழலில் தனக்குள்ள பங்கை தனது ஊழியர்கள் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்," என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஏர்செல் ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments: