Friday, July 8, 2011

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை : மத்திய மந்திரி கபில்சிபல் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.



2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதாக மத்திய மந்திரி கபில்சிபல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பூதாகரமாக கிளம்பக் காரணமாக இருந்தது பொது நல வழக்கு மையமாகும். இந்த மையம்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை கண்டுபிடித்து ஆதாரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஆ.ராசாவை சிக்க வைத்த இந்த மையம் தற்போதைய தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில்சிபலுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.

பொது நல வழக்கு மையம் சார்பில், மூத்த வக்கீல் காம்னி ஜெய்வாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது :-

13 வட்டாரங்களுக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை அனில் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த உரிமங்கள் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதைக் கண்டுபிடித்த தொலைத் தொடர்புதுறை அதிகாரிகள், ஒவ்வொரு உரிமத்தின் மீறலுக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

மொத்தம் 13 வட்டங்களுக்கும் சேர்த்து ரூ.650 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து, மத்திய மந்திரி கபில்சிபலுக்கு தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கடிதம் எழுதினர்.

இது தொடர்பாக ஆவணங்களையும் கபில்சிபலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளின் பரிந்துரையை கபில்சிபல் நிராகரித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வெறும் ரூ.5 கோடியாக குறைத்துவிட்டார்.

இதன் மூலம், கபில்சிபல் தனது அலுவலகத்தையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே, கபில்சிபலுக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன் வதி, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை புறக்கணித்து விட்டு, அப்போதைய மந்திரி ஆ,.ராசாவுக்கு ஆலோசனை வழங்கினார். இதன் மூலம், அவர் விதிமுறைகளை மீறியுள்ளார். எனவே இவர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

No comments: