Friday, July 8, 2011

பாஜக ஆட்சியில் ரூ. 43,000 கோடி இழப்பு - தொலைத் தொடர்புத்துறை.



பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு இடமாற்றக் கொள்கை காரணமாக ரூ. 43,000 கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது என்று தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை கடைப்பிடித்த 'மைக்ரேஷன்' கொள்கை குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் விளக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி குழு முன்பு தொலைத் தொடர்புத்துறை தனது விளக்கத்தை அளித்தது.

அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது கடைப்பிடிக்கப்பட்ட மைக்ரேஷன் கொள்கையால் நாட்டுக்கு ரூ. 43,000 கோடி இழப்பு ஏற்பட்டது. அதன் சரியான தொகை ரூ. 43,523.92 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளு்மன்றக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் நேற்று தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் பலரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாஜக கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம். அந்த விசாரணையின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிஆட்சியின்போது எந்தத் தவறும் நடக்கவில்லை என்று தெரிய வந்ததாக சிபிஐ கூறியிருந்தது. ஆனால் மைக்ரேஷன் கொள்கை காரணமாக நாட்டுக்கு ரூ. 43,000 கோடி இழப்பை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்படுத்தியதாக நேற்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

No comments: