Sunday, July 24, 2011

‘தலைமறைவு ’ வீரபாண்டியார், ஜம்மென்று மேடையில் தோன்றினார் !



தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது, யார் வருகிறார்களோ இல்லையோ, வீரபாண்டி ஆறுமுகம் வருவாரா என்று பார்க்கவே பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம், வீரபாண்டியாரை தமிழக போலீஸ் ‘வலை விரித்து’ தேடிவருவதாக சேலம் காவல்துறை ஆணையாளர் வெள்ளிக்கிழமைதான் அறிவித்திருந்தார்.

சேலம் போலீஸ் விரித்த வலை விரித்தபடியே இருக்க, சேலத்திலிருந்து வெறும் 165 கி.மீ. தொலைவிலுள்ள கோவை - சிங்காநல்லூரில், ஜம்மென்று வந்திறங்கினார் வீரபாண்டியார். தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். கூட்டத்துக்குள் முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. பளபளவென்று மேடையிலே ஜொலித்தார்!

செயற்குழு கூட்டத்தில் மைக் பிடிக்கவும் தவறவில்லை அவர். “கட்சிக்குள் புகார் வந்தால், கட்சியில் இருந்து பிரமுகர்கள் நீக்கப்படுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார்.

தன்னை போலீஸ் தேடுவது பற்றியோ, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றியோ, குறைந்தபட்சம் அவை பொய் என்றோ, வாயே திறக்கவில்லை அவர்.

கருணாநிதி பேசும்போது, தனது பேச்சில் வீரபாண்டியரை போலீஸ் தேடுவது பற்றித் தொட்டுவிட்டுச் சென்றார். “இங்கு வந்துள்ள வீரபாண்டி ஆறுமுகம் போலீஸால் தேடப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மட்டுமல்ல. நானே ஒரு காலத்தில் தேடப்பட்டவன்தான்” என்றார்.

“எனக்கு எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம், எப்போது வந்தீர்கள் என்று கேட்கக்கூட, எனது மனம் துணிவைப் பெறவில்லை. அந்தளவுக்கு, அவர்கள் போலீஸால் தேடப்படுபவர்களாக, விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் என அழைக்கப்படுபவர்களாக, உள்ளார்கள். அப்படி தேடப்படும் நிலையிலும்கூட, நமது செயற்குழு கூட்டத்துக்கு மண்டபம் நிறைந்து வழிகிற அளவுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று கழகக் கண்மணிகளைப் பார்த்து உருகினார்.

செயற்குழு கூட்டம் ரகசியமாக நடைபெறவில்லை. கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக கோவை போலீஸார் நின்றிருந்தனர். கூட்டம் முடிந்தபின் வெளியே வந்த வீரபாண்டியார், போலீஸை ஒரு கேலிச் சிரிப்புடன் பார்த்துவிட்டு, தனது வண்டியில் ஏறி, போலீஸின் முகத்தில் டீசல் புகை அடித்துவிட்டுச் சென்றார்!

No comments: