Tuesday, April 19, 2011

அசன்அலிக்கு பாஸ்போர்ட் : கவர்னர் இக்பால்சிங்கை விசாரிக்க பிரதமர் அனுமதி.


அசன்அலிக்கு பாஸ்போர்ட்:கவர்னர் இக்பால்சிங்கை விசாரிக்க பிரதமர் அனுமதி

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ல் இவர் பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்பால்சிங் புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இதையடுத்து இக்பால்சிங் டெல்லியில் மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம், கவர்னர் இக்பால்சிங் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவரே முடிவு செய்வார். இதில் அவரை கட்சி எந்த விதத்திலும் வற்புறுத்தாது என்று கூறி உள்ளது.

இந்த நிலையில் அசன் அலி கூட்டாளிகளும் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெற இக்பால்சிங் பரிந்துரை செய்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது இக்பால்சிங்குக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அமலாக்கப்பிரிவு தீவிரமாக உள்ளது.

இதற்காக மத்திய அரசி டம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனுமதி கோரி இருந்தனர். இதை ஏற்று இன்று காலை அமலாக்கப்பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதல் தகவல் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே கவர்னர் இக்பால்சிங் இன்று அல்லது நாளை புதுச்சேரி திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் புதுவை வந்ததும் அமலாக்கப்பிரிவு சிறப்பு அதிகாரிகளும் வர உள்ளனர். புதுவை கவர்னர் மாளிகையான ராஜ்நிவாசில் வைத்து கவர்னர் இக்பால்சிங்கிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.
அசன்அலியுடன் சட்டவிரோத உறவு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி இக்பால்சிங்கிடம் அதிகாரிகள் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது.


No comments: