Friday, October 7, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வழக்கு : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திர்க்கு நோட்டீஸ்.



சென்னை : எம்.பி.பி.எஸ். தேர்வில் புது விதிமுறையை புகுத்தப்பட்டதை எதிர்த்து, 150 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நாமக்கல்லை சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவி சுருதி உள்பட 150க்கும் அதிகமானவர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்துள்ளோம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டு இறுதி தேர்வு எழுதினோம். தேர்வு முடிவுகள் இன்டர்நெட் வாயிலாக கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு பாடத்தின் முதல் தாளில் நாங்கள் தோல்வி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறையின்படி ஒவ்வொரு பேப்பரிலும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் வெற்றி அறிவிக்கப்படும். பழைய விதிமுறையின்படி, ஒரு பாடத்துக்கான இரண்டு பேப்பரிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தது 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு எதிரானது. வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற விதிமுறை இல்லை. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு வகுப்புக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.டி.சுப்பிரமணியன் ஆஜராகி, வரும் 10ம் தேதி முதல் 2ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கவிருக்கின்றன. எனவே மாணவர்கள் 2ம் ஆண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் எம்ஜிஆர் பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 3 பேர் வரும் 14ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி
தினகரன், 7-10-2011

No comments: