Wednesday, April 6, 2011

திருச்சி ஆம்னி பஸ் கூரையில் அனாதையாக கிடந்த ரூ.5 கோடி சிக்கியது.


திருச்சியில் ஆம்னி பஸ் கூரையில் அனாதையாக கிடந்த ரூ.5Ð கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா?

திருச்சியில் ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.5 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், உதவி கலெக்டருமாக இருப்பவர் டாக்டர் சங்கீதா.

இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர், திருச்சி பொன்னகர் பகுதியில் திண்டுக்கல் சாலையில் ஓரமாக நிற்கின்ற எம்.ஜெ.டி. (முத்து ஜெயம் டிரான்ஸ்போர்ட்) எனும் ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து உஷாரான தேர்தல் அதிகாரி சங்கீதா உடனடியாக தனது டிரைவர் துரைராஜ் மற்றும் வீட்டு காவலாளி ராமர் ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு தனது வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு ஆம்னி பஸ் நிற்பதை கண்டார். ஆனால் பஸ் மட்டும் நின்றது மனிதர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை.

இதனால் அதிகாரி சங்கீதா பாதுகாப்பிற்காக அருகில் கருமண்டபம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரன் மற்றும் துணை ராணுவ படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசாரை வேனில் உடன் அழைத்து வந்தார். மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த தனியார் ஆம்னி பஸ்சின் அருகே ஒரு கறுப்பு நிற இன்னோவா கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி விரைந்து சென்று அந்த காரை மறித்தார். அந்தகாரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் இந்த நேரத்தில் எதற்காக இந்த இடத்தில் நிற்கிறீர்கள் என தேர்தல் அதிகாரி சங்கீதா விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த பஸ்சின் டிரைவரை விடுவதற்காக காரில் அழைத்து வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி சங்கீதா பஸ்சில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததுள்ளது.

பஸ்சை சோதனையிட வேண்டும் என்று கூறி தன்னுடன் அழைத்து வந்த போலீசார் மற்றும் டிரைவரை பஸ்சின் உள் பகுதியில் சென்று சோதனை நடத்தும்படி கூறினார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் பஸ்சின் உள்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இதில் பணம் எதுவும் இருப்பது தெரியவில்லை. பஸ்சின் மேற்கூரையில் தார்பாய் போட்டு மூடப்பட்டு கட்டப்பட்டிருந்தது.

இதனை கண்ட தேர்தல் அதிகாரியின் டிரைவர் துரைராஜ் பஸ்சின் மேல்பகுதியில் ஏறுவதற்காக பஸ் டிரைவரிடம் ஏணியை கேட்டார். அதற்கு பஸ் டிரைவர் அப்படியே தான் ஏற வேண்டும். ஏணியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறினார். இதனால் சந்தேகமடைந்த சங்கீதா மற்றும் போலீசார் பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியை திறந்து பார்த்தனர்.

அதில் ஒரு ஏணி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஏணியை எடுத்து பஸ்சின் மேல்பகுதியில் டிரைவர் துரைராஜ் ஏறினார். தார்ப்பாயை விலக்கி பார்த்தபோது அதில் 5 டிராவல் பேக்குள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டார். அதில் ஒரு பேக்கை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே தேர்தல் அதிகாரி சங்கீதாவிடம் பணம் இருப்பதை எடுத்துக்கூறினார்.

இந்த சமயத்தில் இன்னோவா காரில் வந்த 4 பேரும் காரை விட்டு விட்டு தலைதெறிக்க தப்பி ஓடினர். இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த 5 டிராவல் பேக்கையும் கீழே எடுத்து பார்த்தனர். அப்போது 5 பேக்கிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேவதாசன், ராஜகோபால், வருமான வரித்துறை துணை இயக்குனர் ஆல்பர்ட் மனோ கரன் மற்றும் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் அதிகாலையில் தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேக்கில் இருந்த புத்தம் புதிய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் கட்டுக்கட்டான பணத்தை பார்த்ததும் அதிகாரிகள் அனைவரும் திகைப்படைந்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதி செய்ய 5 பேக்குகளையும் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

அங்கு பேக்கில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் பணத்தை தனித்தனியாக எடுத்து எண்ணினர். இதில் மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்னி பஸ்சையும், தப்பியோடியவர்கள் வந்த காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

பஸ் மற்றும் காரின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார்? என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் காரின் உரிமையாளர் திருச்சி பொன்னகர் பகுதி 2-வது கிராசை சேர்ந்த உதயகுமரனின் மனைவி உமாமகேஸ்வரி என தெரியவந்தது. பஸ் பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமண ரெட்டியாரின் மகன் ஜெயராமனுக்குரியது என்றும், பஸ்சை நிர்வகித்த வருவது உதயகுமரன் தான் எனவும் தெரிந்தது.

இதையடுத்து உடனே தேர்தல் அதிகாரி சங்கீதா, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கமோண்டோ படை வீரர்கள், போலீசார் உதயகுமரனின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு உதயகுமரன், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் அருண் பாலாஜி ஆகியோரிடம் பஸ்சில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும், உங்களுடைய காரில் அங்கு வந்தது யார்? எதற்காக அந்த நேரத்தில் அங்கு வந்தார்கள்? எனவும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக தெரிகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.81 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மேல் விசாரணைக்காக உதயகுமரன் மற்றும் அவரது மகன் அருண் பாலாஜி, டிராவல்ஸ் பஸ்சின் மேலாளரான பாலு ஆகியோரை வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அழைத்துச்சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் பஸ்சில் பணம் வைக்கப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் பஸ் 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த பணத்தை பஸ்சில் வைத்தவர்கள் யார்? என தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகள் பஸ்சில் சோதனை செய்த போது தப்பியோடிய பஸ் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் ஆம்னி பஸ்சில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்று சோதனை நடத்தினோம். இதில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை அதில் வைத்தது யார்? யாருக்குரியது, முறையான ஆவணங்கள் உள்ளதா? என தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றோம்.

பறிமுதல் செய்யப்பட்ட பஸ் பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் ரெட்டியார் என்பவரது மகன் ஜெயராமன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும் பஸ் நிர்வாகம் அனைத்தையும் உதயகுமரன் தான் செய்து வருகிறார். அதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னர் உண்மை தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்திலே இதுவரை தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் தான் மிகப்பெரிய தொகையாகும். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா? அதனை யார் வைத்தது? பணம் யாருக்குரியது? எங்கிருந்து வந்தது?, அதில் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? என தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகளால் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மட்டும் அல்லாமல் தமிழகத்திலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் தொலைகாட்சி உள்ளிட்ட சில ஊடகங்களிலும், செய்திகளிலும் இன்று அதிகாலை தேர்தல் கமிஷனால் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணங்கள் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டது என்று தவறாக திட்டமிட்டு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனது உறவினர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

No comments: