Wednesday, April 6, 2011

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு : வைகோ பங்கேற்றார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், இன்றும், (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நீரி நிறுவனத்தின் ஆய்வில் வைகோ பங்கேற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆலையை மூடுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், மாத்தூர் ஆகியோர் முன்னிலையில் 25.2.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

வைகோ, தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து "நீரி'' நிறுவனம் ஆய்வு நடத்தி முழுமையான அறிக்கையை 8 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், 6 மற்றும் 7ந் தேதிகளில் நீரி' நிறுவன அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீரி நிறுவனத்தின் ஆய்வு வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு முன்தகவல் தந்து நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வைகோ, 6ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வரும்படி நீரி நிறுவனத்தின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.


வைகோ, நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இன்று ஆய்வு செய்கின்றனர். வைகோ வந்துள்ளார்.

No comments: