Wednesday, April 6, 2011

என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!- வடிவேலு புகார்!


என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!
என் மீது தாக்குதல் நடத்தி கொல்லப் பார்க்கிறார்கள் விஜயகாந்த் ஆதரவாளர்கள். என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு, என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிரம் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் போது விஜயகாந்தை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். இந்த நிலையில் முதுகுளத்தூரில் அவர் வேனில் பேசி கொண்டு இருந்தபோது அவர் வேன் மீது கல்வீசப்பட்டது. இதேபோல சிவகங்கையில் பேசிக் கொண்டிருந்த போதும் கல்வீசப்பட்டது.

நேற்று மாலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு பிரசாரம் செய்ய சென்றார். அப்போது ஊருக்குள் நுழையும் இடத்தில் தேமுதிகவினர் வடிவேல் சென்ற வேன் மீது சரமாரியாக கல்வீசி தாக்கி விட்டு ஓடிவிட்டனராம்.

இதனால் வேன் கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து நடிகர் வடிவேல் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பிரசாரம் செய்ய வருவதை முந்கூட்டியே அறிந்து யாரோ சிலர் இருட்டிலிருந்து கல்வீசி தாக்கினர். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லை.

பேருக்காக 4 போலீசார் மட்டும் வந்து செல்கிறார்கள். போதிய பாதுகாப்பு இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் உள்ளவர்கள் யாரென்று மக்களுக்கும் தெரியும்," என்றார்.

பிரசாரம் முடித்து கொண்டு மதுரைக்கு வந்த வடிவேலுவிடம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கல்வீச்சு சம்பவம் குறித்து விசாரித்தார்.

மு.க.அழகிரியுடன் நடிகர் வடிவேலு பிரச்சாரம்.

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

இனிமேல் பிறகுக்கும் குழந்தைகள் எல்லாம் அழாமல், புலிகேசி மாதிரி சிரிக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்கள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் சொல்றாங்க. என் செல்லமே நீ என்னைக்கு என் வயிற்றில் உதயமானியோ, அன்றைக்கே உதயசூரியனுக்கு சொந்தக்காரர் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என்று சொல்றாங்க.

108 ஆம்புலன்ஸ் திட்டம் அருமையான திட்டம். பல் இல்லாமல் இருந்திடலாம். ஆனால் இப்போது செல் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. யாராவது எங்கேயாவது அடிபட்டு கிடந்தாலோ அல்லது உடல் நிலை சரியில்லாமல் சீரியசாக இருந்தாலோ ஒரு போன் போட்டா உடனே 108 வண்டி வந்து நிற்கிறது. முடிந்த அளவுக்கு அங்கேயே வைத்தியம். முடியவில்லை என்றால் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டுபேய் சிகிச்சை செய்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய விருப்பமா. கலைஞர் காப்பீட்டுத் திட்டம். மீண்டும் கலைஞர் முதல் அமைச்சராக ஆவார். சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார் என்றார்.

ஜெயலலிதாவுக்கு வடிவேலு கேள்வி?

ஆண்டிப்பட்டியை அரசர்பட்டியாக்குவேன் என்று சூளுரைத்த ஜெயலலிதா அந்த தொகுதியின் எம்எல்ஏவாக 5 ஆண்டுகள் இருந்து என்ன செய்தார் என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

திமுகவுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன். ஆண்டிப்பட்டியை அரசர்பட்டியாக்குவேன் என்று சூளுரைத்த ஜெயலலிதா அந்த தொகுதியின் எம்எல்ஏவாக 5 ஆண்டுகள் இருந்து என்ன செய்தார் என்றார்.

No comments: