Tuesday, April 5, 2011

சொன்னதைச் செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய கருணாநிதியை மீண்டும் தேர்ந்தெடுங்கள்-சோனியா.

சொன்னதைச் செய்து, வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும், திமுக கூட்டணிக் கட்சிகளையும் மீண்டும் தேர்வு செய்யுங்கள். திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரமாண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது:

இந்தியாவின் முதன்மையான, முக்கியமான, முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் துறையிலே, வாகன உற்பத்தியிலே முன்னணியில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தியத் திருநாட்டில், தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழகம் தொழில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் சாப்ட்வேர் துறையிலும் முன்னணியில் உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, தேயிலை உற்பத்தியில் முதன்மையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரத் துறையிலும் முன்னணியில் உள்ளது. தமிழகம் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறப்பான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு இன்று குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதில், நலத் திட்டங்கள் அளிப்பதில், பெண்களுக்கு திருமண நிதியுதவி அளிப்பதில், கர்ப்பிணிப் பணிகளுக்கு நலம் செய்வதில், அங்கன்வாடிகளை அமைப்பதில், வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில், ஏழைகளுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவதில் கருணாநிதி அரசு அற்புதமாக பணியாற்றி வருகிறது.

மத ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையே இணக்கமாக வாழ்கிற பண்பு, அது மட்டுமல்ல, தலித் மக்களுக்கும், பின் தங்கியவர்களுக்கும் திமுக அரசு செய்து வரும் அற்புதமான உதவியைப் பார்த்து பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சாத்தியமானதற்குக் காரணம், கருணாநிதி அரசு இந்த சாதனைகளைச் செய்யக் காரணம், மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கொடுத்து வரும் ஒத்துழைப்பும், அளித்து வரும் அனுசரணையும்தான். இதன் காரணமாகத்தான் திமுக அரசு 2006ம் ஆண்டுக்கு ஆட்சிக்கு வந்தபோது ரூ. 9675 கோடியாக இருந்த மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு, 2010-11ல் ரூ. 17,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது புதிய அரசைத் தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறீர்கள். சென்ற முறை சாதனைக்காக வாக்களித்தீர்கள். அதைப் போல வாக்குறுதிகளுக்காக வாக்களித்தீர்கள். இந்த முறையும், கடந்த காலத்தில் செய்த சாதனைகளை மீண்டும் நிறைவேற்ற, வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மீண்டும் பாராட்டும் வகையில், மீண்டும் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றிய இவர்களுக்கு வாக்களியுங்கள்.

நமது அண்டை நாட்டிலே தமிழ் மக்கள் படும் சிரமங்கள் உங்களது இதயத்தைத் தொட்டது போல எனது இதயத்தையும் அது தொட்டுள்ளது. அந்த பிரச்சினை குறித்து நாங்களும் கவலையுடன்தான் உள்ளோம். கொடுத்த உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஏராளமான பணத்தை இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்காக கொடுத்துள்ளோம். 50,000 வீடுகளை புதிதாக கட்டித் தருகிறோம். அது மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர்கள் தன்மானத் தோடும், எல்லா உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அரசியல் சட்டத் திருத்தத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழக மீனவர்கள் சிலர் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளது பெரும் வருத்தம் தருகிறது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதியாக சொல்கிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் முதல்வர் கருணாநிதியின் கடுமையான உழைப்பின் காரணமாக, சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் வகையில் திமுக ஆட்சி செய்து வருகிறது. அது தொடர வேண்டும். காங்கிரஸ் மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சோனியா காந்தி.

பின்னர் திமுக கூட்டணி வேட்பாளர்களை சோனியா காந்தி அறிமுகப்படுத்தினார். முதல் நபராக அதிமுகவிலிருந்து திமுகவுக்கு கட்சி மாறி வந்து தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அறிமுகப் படுத்தப்பட்டார். பின்னர் சென்னையில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

No comments: