Tuesday, April 5, 2011

விஜய்காந்த் 'ஆஃப்' அடித்தாலும் 'ஃபுல்' அடித்தாலும்-ராமதாஸ்.


'ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்' என்று விஜய்காந்த் பேசியுள்ளார். அவர் 'ஆஃப்' அடித்தாலும் சரி இல்லை 'ஃபுல்' அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை.

தமிழகத்தில் மட்டுமே கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனைகளை சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் ஏன் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை?.

மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள சகாயம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்கிறார். ஆர்.டி.ஓ. மிரட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது புகார் கொடுக்கச் சொல்கிறார். ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதா அவர் வேலை?.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் செல்லும் இடங்களில் என்னுடன் வருபவர்களை வைத்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அனைவருமே திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைத்தான் சொல்லி வருகின்றனர்.

திமுக தலைமையிலான கருணாநிதி ஆட்சியில் செய்தவை எல்லாம் இனியவை நாற்பது. அதிமுக ஆட்சி செய்தவை எல்லாம் இன்னா நாற்பது.

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது நானும், தமிழக முதல்வர் கருணாநிதியும் அதை கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அதிமுகவில் இருந்து யார் இதனை எதிர்த்தனர்?.

அதிமுக கூட்டணியில் நிதானமிழந்துப் பேசி வரும் நடிகர் ஒருவர் 'ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். அவர் 'ஆஃப்' அடித்தாலும் சரி இல்லை 'ஃபுல்' அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அரிதாரம் பூசிக் கொண்டு மாலை 5 மணிக்கு மேல் மேடையில் தோன்றுபவர்கள் அல்ல.

வேட்பாளரை மேடையில் அடிப்பவர் நாளை எம்எல்ஏ ஆனால் சட்டப் பேரவைத் தலைவரைக் கூட அடிப்பார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது முற்றிலும் சரியான கருத்து என்றார் ராமதாஸ்.

இந் நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில், இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்தேன். இந்த முறை ஜெ.அன்பழகனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். தி.மு.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள்.

நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும், தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் கலைஞருக்குத்தான் வாக்களிப்போம் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஆட்சி மாற்றம் எப்படி வரும்?.

கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா 2 முறை முதல்வராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா?, அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.

தேர்தல் ஆணையம் அதிமுகவக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம். திமுக கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. இந்த கூட்டணியில் நான், கலைஞர், சோனியா, திருமாவளவன் எல்லோரும் இன்று மாலையில் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.

அந்த கூட்டணியை நினைத்து பாருங்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். இப்படி ஒரு கட்சி. பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள்.

படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. இந்த பருப்பெல்லாம் வேகாது. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கலைஞர் 6வது முறையாக முதல்வர் ஆவது உறுதி என்றார்.

No comments: