Tuesday, April 5, 2011

சூரசம்ஹாரம் : விஜயகாந்த் பேச்சு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். திருமங்கலம் தேவர் திடலில் அவர் பேசினார்.

இதனை அடுத்து அவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசும் போது,

எனது மானசீக குருவான எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதும் முதல் பொதுக்கூட்டத்தை திருப்பரங்குன்றத்தில் தான் நடத்தினார். அதேபோல் நானும் தே.மு.தி.க. கட்சியை இதே திருப்பரங்குன்றத்தில் தான் தொடங்கினேன்.

தே.மு.தி.க. தோன்றிய இடத்தில் வேட்பாளராக ஏ.கே.டி.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

முருகப்பெருமான், அசுரனை சம்ஹாரம் செய்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி திருட்டு, கொள்ளையடிக்கிற தி.மு.க. கூட்டணியை மக்கள் தங்கள் ஓட்டு மூலம் சம்ஹாரம் செய்ய வேண்டும்.

அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். மக்கள் தெய்வங்களாகிய நீங்கள் தீயவர்களை கொல்ல வேண்டும்.

தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்றவே எனது மானசீக குருவான எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

மக்களாகிய நீங்களும் எனது கட்சி தொண்டர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளேன். நீங்கள் கூறியதை நான் கேட்டேன்.

அதேபோல் நான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும். பொய்யான காட்சிகளை சித்தரித்து காட்டுகின்ற டி.வி.க்களை தேர்தல் வரை பார்க்காதீர்கள்.

நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு வேடங்களில் நடித்து என்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும். மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். நேர்மையான தேர்தல் அதிகாரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அது தவறா? முதலமைச்சர் கலைஞர், தேர்தல் ஆணையத்தை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்கிறார். தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிற மின்வெட்டு தான் எமர்ஜென்சி. காங்கிரஸ் கட்சி ஒன்றுக்கும் உதவாத கட்சி. என்று பேசினார்.

No comments: